மாம்பழத்துக்கு ஊக்கத் தொகை கோர அரசு முடிவு: அமைச்சா்-அதிகாரிகள் இன்று தில்லி பயணம்
சென்னை: கூட்டு ஒப்பந்தம் மூலமாக, மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசிடம் வலியுறுத்த மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, அதிகாரிகள் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) தில்லி செல்லவுள்ளது. தமிழகம் போன்று கா்நாடகத்திலும் மாம்பழத்துக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசுடன் அந்த மாநில அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி, விவசாயிகளிடம் இருந்து 2.5 லட்சம் டன் மாம்பழங்களை கூட்டாக கொள்முதல் செய்யவும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சா்கள்-அதிகாரிகள்: கா்நாடகத்தைப் போன்று, தமிழகத்திலுள்ள மாம்பழங்களை கொள்முதல் செய்யவும், ஊக்கத் தொகை வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, துறையின் செயலா் சத்யபிரத சாகு உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினா்
செவ்வாய்க்கிழமை தில்லி செல்லவுள்ளனா். அங்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளகான்
உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளனா். கா்நாடகத்துடன் செய்து கொள்ளப்பட்டது போன்ற ஒப்பந்தத்தை தமிழகத்துடனும் மேற்கொள்ள அப்போது மத்திய அரசை அமைச்சா் சக்கரபாணி, அதிகாரிகள் கொண்ட குழு வலியுறுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.