
பாகிஸ்தான் நாட்டில் சர்வதேச மகளிர் தினத்தை தேசிய விடுமுறையாக அங்கீகரிக்க வேண்டுமென உமன்ஸ் மார்ச் எனும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நேற்று (மார்ச் 6) நடைபெற்ற சந்திப்பில், உமன்ஸ் மார்ச் அமைப்பின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்நாட்டின் சமூக ஆர்வலர்களான பர்ஸானா பாரி, ஹுதா புர்காரி, நிசாத் மரியம், ஜைனப் ஜாமில் மற்றும் ஜியா ஜக்கி ஆகியோர் கலந்துக்கொண்டு சர்வதேச மகளிர் நாளான ‘மார்ச் 8’ பாகிஸ்தானின் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும், இந்த சந்திப்பின் போது அந்நாட்டின் மனித உரிமை, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
பாகிஸ்தானில் நடைபெறும் பாலினப் பாகுபாடுகள், வன்முறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யப்பட வேண்டும் எனவும் திருநங்கைகள் உரிமை பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தி அவர்களுக்கு எதிரான வன்முறைகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சமூக நீதி குறித்து கூறுகையில், சிறுபான்மையின சமூகத்தினருக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய அத்தியாவசியங்கள் வழங்கப்பட அரசு வழிவகுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையும் படிக்க: 4 படகுகள் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 186 பேர் மாயம்!
இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் சார்பில் தெய்வ நிந்தனைச் (பிலாஸ்ஃபெமி) சட்டங்கள் அந்நாட்டில் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து தங்களது வருத்ததைத் தெரிவித்ததோடு அதனால் பிறர் பாதிக்கப்படுவதைத் தடுக்க உடனடி திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமெனக் கூறப்பட்டது. மேலும், கிறிஸ்தவ, இந்து, ஷியா மற்றும் அகமதி சமூகங்கள் துன்புறுத்தப்படுவதை கண்டித்து, அவர்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் பாதுகாக்கக் கோரினர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து அவர்கள் பேசியபோது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கூட்டங்கள் நடத்த அரசு தொடர்ந்து தடை விதிப்பதோடு, அதற்கு தேவையான சான்றுகளைப் பெறுவது மிகவும் கடினாமாகவுள்ளதைப் பற்றிய தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.
இத்துடன், பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோர் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டு மாயமாக்கப்படும் விவகாரத்தில் அரசு தலையீட்டு முடிவு காண வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து, "பசுமை பாகிஸ்தான்" போன்ற அந்நாட்டு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர அவர்கள் அழைப்பு விடுத்ததோடு அந்நாட்டில் பாலின சமத்துவத்தை உருவாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.