
சென்னை: புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உலக மகளிர் நாளையொட்டி சனிக்கிழமை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கான நாள் இது. “இங்கே ஆண்களுக்கு என்ன வேலை?” என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். “தாயில்லாமல் நானில்லை” என்று சொல்லத்தக்க வகையில், ”பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை” என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள் என்பதால், உங்களோடு சேர்ந்து உலக மகளிர் நாள் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான்! அதுவே முழுமையான சமூக நீதி!
பெரியார் போட்ட தீர்மானத்தை சட்டமாக்கி சொத்துரிமை தந்தவர் கலைஞர் . மேலும், காவல்துறையில் மகளிர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று பல முற்போக்குத் திட்டங்களை கொண்டு வந்தார்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப் பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரை பங்கு பெறச் செய்திருக்கிறோம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பாதுகாக்க‘பாலின வள மையங்கள்’!
உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கினோம்! அதில் வெற்றி பெற்றதில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் சுய உதவிக் குழு மகளிர்தான்!
வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபைவசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அதை அமைக்க இருப்பதாக கூறினார்.
மேலும், நான் எங்கே சென்றாலும், அங்கே கூடுகின்ற கூட்டத்தில் அதிகம் இருப்பது பெண்கள்தான். “பெண்களின் உரிமையை அனைத்து தளங்களிலும் உறுதிசெய்கின்ற ஆட்சியாக, கோரிக்கைகள் வைக்காமலேயே நிறைவேற்றுகின்ற ஆட்சியாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது என்று நீங்கள் பாராட்டுகிறீர்கள். அந்த தருணம், “இதுதான் ஆட்சியின் பலன் - இதற்காகத்தான் ஆட்சிக்கு வந்தேன்” என்று நினைத்து, நினைத்து நான் பூரிப்படைவதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.