
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு!
குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில், ரூ.675 கோடி மதிப்பீட்டில், 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு குடிநீர் வழங்கல் சீராக நடைபெறுவது உறுதி செய்யப்படும்!
* ரூ.400 கோடியில் மாநகராட்சி நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள்.
* ரூ.2,423 கோடியில் சென்னையில் முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்.
* ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்படும். இதன் மூலம் 29.74 இலட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.
* ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம்!
* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்படும்.
* ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) அமைக்கப்படும்.