
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை 2025-26 ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீடு!
* ரூ .100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் உருவாக்கப்படும்.
* விண்வெளித் தொழில்நுட்ப நிதி - ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.
* ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* ரூ.160 கோடி மதிப்பீட்டில் 2000 அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.56 கோடி மதிப்பீட்டில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
* ரூ.65 கோடி மதிப்பீட்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்த்தப்படும்.
* தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
புதிய வேலைவாய்ப்புகள்
* ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 5,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.250 கோடியில் மதுரை, கடலூரில் காலணித் தொழிற்பூங்கா உருவாக்கப்படும். இதன்மூலம், 20,000 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ரூ.50 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்படுத்தப்படும்.
காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி
* முதல்வரின் காலை உணவுத்திட்டத்துக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், அரசு உதவிபெறும் பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மேலும் 3.14 இலட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.
நேரடி நியமனம் மூலம் ஆசிரியப் பணி
2025 - 26 ஆண்டில், அரசுப் பள்ளிகளில் 1,721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவர். இதற்கான அறிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.