
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக விடியோ பதிவிட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கராச்சியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் ரஃப்தார் எனும் டிஜிட்டல் செய்தி நிறுவனத்தின் உரிமையாளருமான ஃபர்ஹான் மாலிக் என்பவர் மீது, அவரது செய்தி நிறுவனத்தின் சேனலில் முக்கிய அதிகாரிகளைக் குறிப்பிட்டு அரசுக்கு எதிரான விடியோக்களை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் 20 கராச்சியிலுள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று (மார்ச் 25) கராச்சி நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மாலிக் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதன் விசாரணையின் போது, அவர் அரசுக்கு எதிராக பதிவிட்ட விடியோக்களை குறிப்பிட்டுக் காட்டுமாறு அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
பின்னர், இந்த விசாரணையைத் தொடர்ந்து 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது ஜாமின் மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த சனா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி இயக்குநரான ஃபர்ஹான் மாலிக் மீது மின்னணு குற்றத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் நான்கு நாள்கள் விசாரணைக்காக மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும், ஃபர்ஹான் மாலிக் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தானின் ஊடகங்களும் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க: பலூசிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை: முதல்வர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.