
ஆம்பூர்: ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தற்காலிக பம்ப் ஆபரேட்டராக விஜய் பிரசாத் (32) என்பவர் பணிபுரிந்து வந்தார். அதே ஊராட்சியில் அம்பேத்கர் நகர் பகுதியில் பம்ப் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை இறந்தார். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உமர்ஆபாத் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், உடல்கூறாய்வுக்குப் பிறகு சடலத்தை பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் இழப்பீடு வழங்க வலியுறுத்தி துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் ஆம்பூர் - பேர்ணாம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊராட்சித் தலைவர் சுவிதா கணேஷ், துணைத் தலைவர் விஜய், டிஎஸ்பி குமார், உமர்ஆபாத் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு சடலத்தை கொண்டு சென்றனர்.
மறியல் காரணமாக ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.