
புதுதில்லி: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்த்தியுள்ளோம் என ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உத்தரப்பிரேதச தலைநகர் லக்னௌவில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிப்பு பிரிவை ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த ஆலை திறப்பு விழாவிற்கு நேரில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் காரணம் உங்களுக்குத் தெரியும், நான் தில்லியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கான பெருமை. பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவுக்கு பெருமை.நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்க இது ஒரு சந்தர்ப்பம். வெறும் 40 மாதங்களில் இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்தியாவை வளர்ப்பதில் நாம் மிகுந்த பலத்துடன் முன்னேற வேண்டும்.
நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும் போது நமது இலக்குகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மிக முக்கியம். வாஜ்பாய் தலைமையில் விஞ்ஞானிகள் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி நமது வலிமையை உலகிற்கு காட்டினர்.
"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கை மூலம் ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை (மே 7) அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹவல்பூர் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தளமான முரிட்கே ஆகியவை அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் மூலோபாய கூட்டாண்மையின் சின்னமாகும்.
பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டு வரும் அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டன என்றார்.
"இந்திய ராணுவத்தின் வெற்றியை" ஒட்டுமொத்த தேசமும் வாழ்த்துகிறது" என்று சிங் கூறினார்.
மேலும், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான விருப்பத்தையும், ராணுவ சக்தியின் திறனையும் உறுதியையும் நிரூபித்திருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடு பாதுகாப்பாக இருக்காது என்பது மட்டுமல்ல எல்லையைத் தாண்டிய நிலம் கூட பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் எஜமானர்களுக்கும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை உணர்த்தியுள்ளோம்," என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்கும் நோக்கில் இந்தியப் படைகள் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியதாக கூறிய ராஜ்நாத் சிங், இந்தியப் படைகள் பாகிஸ்தான் மக்களை குறிவைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள், அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. அதையும் முறியடித்து வெற்றி கண்டு வருகிறோம்," என்று தெரிவித்தார்.
இந்திய ராணுவம் வீரம், தைரியம் மற்றும் நிதானத்தை வெளிப்படுத்தியுள்ளது, மேலும் பாகிஸ்தானின் பல ராணுவ தளங்கள் மீது தாக்குதலை நடத்தி தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்களைச் செய்து, அதனால் ஏற்பட்ட விளைவுகளை முழு உலகமும் பார்த்தாக ராஜ்நாத் சிங் கூறினார்.
உரி சம்பவத்திற்குப் பிறகு, இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இப்போது பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா பல தாக்குதல்களை நடத்தி வருவது எப்படி என்பதை உலகம் பார்த்து வருகிறது," என்று அவர் கூறினார்.
"பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றி, எல்லையின் இருபுறமும் பயங்கரவாதத்திற்கு எதிராக பயனுள்ள நடவடிக்கை எடுக்கும் புதிய இந்தியா இதுதான் என்பதை நமது பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார்," என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.