
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில் அந்தோணியார் ஆலய சப்பரத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அப்போது போதையில் வந்த சிலர், சாலையை மறித்துக் கொண்டு தகராறு செய்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த எஸ் ஸ்டாலின் (40) கத்தியால் வெட்டப்பட்டார். தலையில் காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து காவல் துறைக்குக் கிராம மக்கள் புகார் செய்தனர். ஆனால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் தஞ்சாவூர் - திருவையாறு சாலையில் புதன்கிழமை காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழி அரசு உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.