டாஸ்மாக் வழக்கில் அரசு ஊழியர்களைத் துன்புறுத்தும் அமலாக்கத் துறை! - அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம் பற்றி..
minister muthusamy
அமைச்சர் முத்துசாமி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

அரசியல் உள்நோக்கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கில், சென்னையில் உள்ள அந்த நிறுவன மேலாண்மை இயக்குநா் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இந்நிலையில் இது தொடர்பாக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  சு. முத்துசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"சென்ற அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை  அடிப்படையாகக் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனைகளை மேற்கொண்டது.

இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத் துறை வெளியிட்டது.  இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. 

இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத் துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது. 

பல அமலாக்கத் துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத் துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com