
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரே நபர், பல நபர்களின் ஜிஎஸ்டி எண்களில் வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து பார்களை டெண்டர் எடுத்துள்ளது அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதம் அமலாக்கத் துறை திடீா் சோதனை செய்தது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
மேலும், இது தொடா்பாக பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை செய்கிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் விசாகன், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, தொழிலதிபா் ரத்தீஷ் வீடு உள்பட 10 இடங்களில் கடந்த வாரம் இரு நாள்கள் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.
அந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் டாஸ்மாக் உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது.
டாஸ்மாக் நிறுவனத்தின் நிா்வாகப் பிரிவு பொது மேலாளா் சங்கீதா, துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பொது மேலாளா் சங்கீதா ஆஜரானாா். சோதனையின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
சுமாா் மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், சங்கீதா அளித்த தகவல்கள் அனைத்தும் எழுத்துபூா்வமாகவும், விடியோவிலும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, டாஸ்மாக் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஜோதி சங்கா், காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். ஜோதி சங்கரிடம் இதுவரை ஒன்பது முறை விசாரணை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் ரத்தீஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் அழைப்பாணையும் அனுப்ப உள்ளது.
இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் ரூ.100 கோடி முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்களில் 30-40 சதவிகிதத்திற்கும் மேல் இதேபோன்று மோசடி செய்யப்பட்டு டெண்டர் எடுத்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பார்களை டெண்டர் எடுத்த நபர், அதனை அரசாங்கத்திற்கு தெரியாமல் பல நபர்களுக்கு துணை ஒப்பந்தம் விட்டிருப்பதும் அதன் மூலம் மதுபான வகைகளை அதிக அளவில் கூடுதல் விலைக்கு விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பார் அமைப்பதற்கு டாஸ்மாக் அருகேயுள்ள கட்டடத்தின் உரிமையாளர்களிடம் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வாங்குவதிலும் முறைகேடு செய்யப்பட்டு டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாத பார்கள் செயல்பட்டு வருவதும், அந்த பார்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக்கிலிருந்து மது விற்பனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் அனுமதி இல்லாத பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதுகுறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.100 கோடி முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன், டாஸ்மாக் நிறுவன பொது மேலாளர் ஜோதி சங்கர், மேலாளர் சங்கீதா உள்ளிட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும், இவர்களிடம் 13 மாவட்ட ங்களில் உள்ள டாஸ்மாக் குறித்த விவரங்களை நான்கு நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு பிறகு தற்போது வரை 33 பேருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அளித்துள்ளனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக, பார் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், டெண்டருக்காக வங்கி வரைவோலை(டிடி) எடுக்க பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி எண் உரிமையாளர்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலர்கள் என சம்மன் 20-க்கும் மேற்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்மன் அளிக்கப்பட்ட நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் டாஸ்மாக் முறைகேடு மட்டுமல்லாமல் டாஸ்மாக்கை மையமாக வைத்து நடந்த "பார் டெண்டர் முறைகேடும்" மிகப்பெரிய அளவில் வெளிவரும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.