
சேலம்: ஓமலூர் காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த கொள்ளையனை சனிக்கிழமை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ் மனைவி சரஸ்வதி (68).கணவரை இழந்த இவருக்கு ராஜா (45), முருகானந்தம் (43) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் முருகானந்தம், திருமணம் ஆகி தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ராஜா சேலத்தில் நகைக் கடையில் வேலை செய்து வந்த நிலையில் ராஜாவுடன் சரஸ்வதி வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டி சரஸ்வதி மாலை 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் மூதாட்டியை உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூதாட்டிக்கு சொந்தமான தோட்டத்தில், தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
மேலும், சரஸ்வதி காதில் இருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் குறித்து அறிந்து டிஐஜி உமா, ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில் கட்டிகாரநூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் நரேஷ்குமார் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்தது உறுதிசெய்யப்பட்டது.
இதனிடையே, நரேஷ்குமார் சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நரேஷ்குமாரை பிடிப்பதற்காக சங்ககிரி அருகே உள்ள மலை அடிவாரத்திற்கு சனிக்கிழமை காலை போலீஸார் சென்றுள்ளனர்.
அப்போது, நரேஷ் குமார் போலீஸாரை கத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அவரை கத்தியை போட்டு விட்டு சரணடையுமாறு கூறியும் கேட்காததால் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார்.
இவர் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லூர் பகுதியில் மூதாட்டி ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது. நரேஷ், ஆடு மாடு மேய்க்கும் பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளையும் குறிவைத்து கொடூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் தாக்கியதில் வலது காலில் காயமடைந்த நரேஷ் குமார் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் நரேஷ் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.