ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
பிரதமர் மோடி.
பிரதமர் மோடி.
Published on
Updated on
2 min read

புதுதில்லி: சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி, உரையாடி வருகிறார்.

அதன்படி, தனது 122 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

நாடு முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கிறேம், ஆவேசத்துடனும் உறுதிப்பாட்டோடும் இருக்கிறோம். நாம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டியேத் தீர வேண்டும், இதுதான் இன்று அனைவரது உறுதிப்பாடாக உள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நமது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சல், வீரம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது. நமது வீரர்கள் கையாண்ட அதிதுல்லியம் மற்றும் தீவிரமான தாக்குதலால் எல்லை தாண்டியிருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது நமது உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் இந்தியாவின் மாறிவரும் சித்திரம். இந்த சித்திரம் தான் நாட்டை தேசபக்தியால் நிரப்பியது, அதனை மூவர்ணக்கொடியின் வண்ணங்களால் வரைந்துள்ளது.

நாட்டின் பல நகரங்கள், கிராமங்கள் மற்றும் சிறுநகரங்களில் எல்லாம், ஆயிரக்கணக்கான மக்கள் மூவர்ணக்கொடியுடன் கூடி அதனை கைகளில் ஏந்திக் கொண்டு ஊர்வலமாகச் சென்று நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைத்துக்கொண்டனர்.

சமூக ஊடகங்களில் கவிதைகள், உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் பாடல்கள் பாடப்பட்டன. சின்னச்சின்னக் குழந்தைகள் கூட, ஓவியங்கள் வரைந்தார்கள், அதிலே பெரிய செய்திகள் மறைபொருளாக இருந்தன. மூன்று நாள் முன்பு பிகார் சென்றிருந்த போது, குழந்தைகள் தாங்கள் வரைந்திருந்த ஓவியத்தை எனக்குப் பரிசாக அளித்தார்கள். ஆபரேஷன் சிந்தூர் நாட்டுமக்களை மிகவும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் அதனை தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றியுள்னர். பிகாரின் கதிகாரில், உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மற்றும் பல நகரங்களில் அந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, சிந்தூர் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

நமது வீரர்கள், பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தார்கள். அது அவர்களின் அசாத்திய துணிச்சல். மேலும் அதிலே நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பலமும் இடம் பெற்றிருந்தது. அதிலே தற்சார்பு இந்தியாவின் உறுதிப்பாடு வெளிப்பட்டது. நமது பொறியாளர்கள், நமது தொழில்நுட்பவியலாளர்கள் என அனைவரும் இந்த வெற்றிக்கு வியர்வை சிந்தியிருக்கிறார்கள். இந்த பிரசாரத்திற்கு பிறகு, நாடு முழுவதும் உள்ளூர் மக்களுக்கான குரல் குறித்து நாடு முழுவதும் ஒரு புதிய சக்தி வெளிப்படுகிறது. பல விஷயங்கள் மனதைத் தொடும் வண்ணம் இருக்கிறது.

ஒரு பெற்றோர் இனிமேல் தங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே வாங்கித் தருவோம், சிறுவயது முதற்கொண்டே தேசபக்தி தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். சில குடும்பங்கள் நாங்கள் எங்களுடைய விடுமுறைகளை நாட்டின் ஏதாவதொரு அழகான இடத்தில் செலவு செய்வோம் என்று சபதமே மேற்கொண்டார்கள். பல இளைஞர்கள் இந்தியாவில் திருமணம் செய்வோம் என்ற உறுதிப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளார்கள். மேலும், சிலர் இனி எந்தவொரு பரிசுப்பொருளை வாங்க வேண்டும் என்றாலும், ஒரு இந்தியக் கைவினைஞர்கள் தயாரித்த பொருளையே வாங்குவேன் என்று கூறியுள்ளனர்.

இதுதானே நாட்டின் உண்மையான பலம், மக்களின் மனங்களின் இசைவு, மக்கள் பங்களிப்பு. நாம் நமது வாழ்க்கையில் முடிந்த வரையில் நம்முடைய நாட்டிலே தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கே முன்னுரிமை அளிப்போம். இது பொருளாதார தற்சார்பு தொடர்பான விஷயம் மட்டுமல்ல, இது நாட்டின் நிர்மாணத்தில் பங்களிப்பு பற்றிய உணர்வு. நமது ஒவ்வொரு அடியெடுப்பும் நாட்டின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க முடியும் என மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com