விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு உலக அளவில் உயர்கிறது!

தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு எழுச்சி
அமைச்சர் உதயநிதி.
அமைச்சர் உதயநிதி.
Published on
Updated on
5 min read

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வில்லா உழைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு எழுச்சி பெற்று வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் அவர்கள் ஆற்றலைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய  சாதனைகள் விவரம்:  

44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022

முதல்வர் ஸ்டாலின் சீரிய திட்டமிடல் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ ரூ.114 கோடி செலவில் மாமல்லபுரத்தில் உலகப் புகழ் பெற்ற 44- வது செஸ் ஒலிம்யாட் போட்டி திராவிட மாடல் அரசினால் நடத்தப்பட்டது. 

உலக நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 1654 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டரசின் விருந்தோம்பலைக் கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு நிகழ்ந்தது.

அதன் பயனாக, சென்னை இனி  உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்க் கொடி நாட்டிடத் தொடங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு “ ஆண்டின் சிறந்த மனிதர்” என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024 

துணை முதல்வர் மிகுந்த கவனம் செலுத்தி இந்தியாவிலேயே முதல்முதலாக இரவு நேர ஃபார்முலா-4  கார் பந்தயப் போட்டியை 2024 ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மாநகரில் நடத்தினார்கள். இப்போட்டியில் 3.7 கிலோமீட்டர் சுற்று வட்டத்தில் 15 நாடுகளைச்  சேர்ந்த 40 ஓட்டுநர்கள் பங்குபெற்றார்கள். மோட்டார் பந்தய விளையாட்டில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை வெளிப்படுத்திய இந்தப் போட்டி உலக அளவில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமைகளை ஈட்டி தந்தது.

சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2022

முதலல்வர் மு.க. ஸ்டாலின் டென்னிஸ் சங்கத்திற்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்கள். இந்த நிதி உதவியுடன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு, போட்டிகளில் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்கள்.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை-2023

திராவிட மாடல் அரசு, பல்வகை விளையாட்டுகளையும் தமிழ்நாட்டில் சிறப்பாக வளர்த்திட வேண்டும் என்னும் சீரிய சிந்தனைகளுடன் நடத்தி வரும் உலகப் போட்டிகளில் ஒன்றாகிய; சர்வதேச ஸ்குவாஷ் போட்டி 2023 சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. 

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி -2023

திராவிட மாடல் அரசு வழங்கிய வழங்கிய ரூ.22.66 கோடி நிதியுதவியுடன், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டி ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் உலகின் முதல் பாலிகிராஸ் பாரிஸ் ஜிடி சுற்றுச்சூழல் செயற்கை இழையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023

ளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி-2023 சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்புடன் நடத்தப்பட்டது. 36

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த 5,630 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இப்போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் 2 ஆம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தது.

அதற்கு முன்னதாக, 5-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2022 இல், 288 வீரர்கள் பங்கேற்று 52 பதக்கங்களுடன் தமிழ்நாடு 8-வது இடம் பெற்றிருந்தது. 

சர்வதேச அலை சறுக்குப் போட்டி- 2023

உலகளவில் புகழ்பெற்ற சர்வதேச அலை சறுக்குப் போட்டி-2023 மாமல்லபுரத்தில் 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் சிறப்புடன் நடைபெற்று அனைவரையும் கவர்ந்தது. 

முதல்வர் கோப்பை-2023 - 2024

15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதல்வர் கோப்பை-2023, கடந்த 2023 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ. 50.86 கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 3 இலட்சத்து 76 ஆயிரம் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்கு அளிக்கும் ஊக்கம் காரணமாக விளையாட்டுகளில் பங்கு பெறும் வீரர்கள் வீராங்கனைகள் எண்ணிக்கை பெருகி; அதனால்,  முதல்வர் கோப்பை 2024 இல் ரூ. 83.37 கோடி செலவில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளில் 5 இலட்சத்து 29 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஒரு புதிய வரலாற்றை படைத்தனர். 

மேலும், தமிழ்நாட்டில் முதன்முறையாக சர்வதேச அலை சறுக்குப் போட்டி, அண்ணா மாரத்தான் போட்டி, ஹெச்.சி.எல் சைக்கோளத்தான், அண்ணா மிதிவண்டிப் போட்டி உள்ளிட்ட வேறுபல போட்டிகளும் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திறமை உள்ள வீரர் வீராங்கனைகளின் தேவைகளை நிறைவு செய்து அவர்களின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுக்கும் முனைப்புடன் முதல்வர் மே 5 ஆம் தேதி புதிய முயற்சியாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 680 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.17 கோடி அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று 174 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்குப் புகழ் தேடித் தந்துள்ளனர்.

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்கில் தமிழக விளையாட்டு வீரர்கள் 17 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.1.19 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பாராலிம்பிக் 2024 போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 4 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.5.00 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அனைத்துச் சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறு விளையாட்டரங்கங்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து 234 பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். 

பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாகத் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 பேரவைத் தொகுதிகளில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

4,617 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.152.52 கோடி உயரிய ஊக்கத்தொகை

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள 4,617 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்,  இதுவரையில் எந்த அரசும் வழங்கிடாத வகையில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.152 கோடியே 52 லட்சம் வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

எலைட் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை ரூ. 25 லட்சம் என்பது ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத நிகழ்வாக,, கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கவும், அவர்களின் பயிற்சித் திறனை மேம்படுத்திடும்

வகையிலும் 2023-2024 நிதி நிலை அறிக்கை விவாதத்தின்போது டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டுக் கருவிகள் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி 18.2.2024 இல் மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தது முதல் ரூ.86 கோடி செலவில் அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.   

இதனைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

விளையாட்டுத் துறை குவித்து வரும் விருதுகள்  

உலக நாடுகளே வியக்கும் வண்ணம் பல்வேறு சர்வதேசப் போட்டிகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் பயனாக, விளையாட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த  மாநிலமாகத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகரிக்கப்பட்டு, அகில இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் “விளையாட்டு வணிக விருது-2023” வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஏசஸ் விருதுகள் 2023, 2024 ஆகிய இரண்டுஆண்டுகளுக்கும், வழங்கப்பட்டு  தமிழ்நாடு சிறப்பிக்கப்பட்டது. 

திராவிட மாடல் அரசு விளையாட்டுத் துறை வளர்ச்சி ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அளித்து வரும் ஊகத்தைப் பாராட்டி ஜெம் அவார்ட்ஸ் 2025 விருது வழங்கப்பட்டுள்ளது. இளைய உலக செஸ் சாம்பியனான டி.குகேஷ், 2024 ஆம் ஆண்டிற்கான கேல் ரத்னா விருதைப் பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது 4 தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர். 38 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு 26 தங்கம் 31 வெள்ளி மற்றும் 35 வெண்கலப் பதக்கங்களுடன் 6 ஆவது இடத்தைப் பிடித்துச் சாதித்துள்ளது.

முதல்வர் மாநில இளைஞர் விருது

கடந்த 4 ஆண்டுகளில் சிறந்த சமூக சேவைக்காக 10 ஆண்களுக்கும், 8 பெண்களுக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது. இந்த விருது, பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றுடன் ரூ.1,00,000 ரொக்கப் பரிசும் கொண்டது.

இத்தகைய விருதுகள் வழங்கி பாராட்டப்படும் திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உள்கட்டமைப்புகள் ரூ.26.30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படுகின்றன. 

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் பயிற்சி மையத்துடன் கூடிய பல்நோக்கு விளையாட்டு அரங்கம் ரூ.14.77 கோடியில் அமைக்கப்படுகிறது.  

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்

சிலம்பம்  விளையாட்டு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது;. சர்வதேசப்  போட்டி மற்றும் பாரா ஒலிம்பிக் தேசிய போட்டிகளில் பதக்கங்களை வென்ற 104 விளையாட்டு வீரர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளனர். 

நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்

நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டு. 74 வீரர்கள்  பயனடைந்து வருகிறார்கள்.  

உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடெமிகள் 

ஒலிம்பிக் அகாடமி போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் பெறுவதற்குத் தகுதி படைத்த வீரர்களை உருவாக்கிடும் பணியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முனைந்துள்ளது. இதன் பொருட்டு உயர் செயல் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி ஆகிய இடங்களில் ஒலிம்பிக் அகாடெமிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு உரிய உயர்தரப் பயிற்சிகள் வழங்கிட நிபுணத்துவம் வாய்ந்த 76 புதிய பயிற்சியாளர்கள் 4 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் 5 நிபுணர்கள் 2 பாரா விளையாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

மிஷன் இன்டர்நேஷனல் மெடல் திட்டம் (MIMS)

சர்வதேச அளவில் பதக்கங்களை வெல்ல விளையாட்டு திறமைகளை வளர்க்க, மிஷன் இன்டர்நேஷனல் மெடல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான நிதி உதவி ரூ.10.00 லட்சத்திலிருந்து ரூ.12.00 இட்சமாக உயர்த்தப்பட்டு, 71 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். 

இப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஓய்வில்லா உழைப்பின் மூலம் தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிடமாக தமிழ்நாடு எழுச்சி பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com