

சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளை சனிக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்காவில், முதற்கட்டமாக நீர்நிலைகளின் கரைகளை சீரமைக்கும் பணிகள், அரியவகை மரங்கள், அழகிய மலர்ச் செடிகள் நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் பணிகள் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை(நவ.1) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை, கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் அது தொடர்பான பணிகளை அமைப்பதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 20.9.2024 நாளிட்ட அரசாணையின்படி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு 118 ஏக்கர் நிலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் அறிவிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், சென்னையின் மையப்பகுதியைபெரும் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நான்கு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோட்டக்கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் உள்ள இந்நிலத்தில், பல்வேறு இயற்கை சார்ந்த அனுபவத்தினை அளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இச்சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பூங்கா தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அமைக்கப்பட உள்ள நிலையில் இன்றைய நாள் முதல்வர் அங்கு அமைந்துள்ள நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல், மரக்கன்றுகளை நடவு செய்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் ஆகிய பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.