

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 36 தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கும், நகர் ஊரமைப்புத் இயக்ககத்தில் 24 அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கும், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 24 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சமூகத்திலுள்ள அனைத்து வருவாய்ப் பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தி தருவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாரியம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வீட்டுவசதி தீர்வுகளை வழங்கி வருகிறது.
மேலும், தற்போது இவ்வாரியம் பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டடங்கள், மறுகட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் 36 தொழில் நுட்ப உதவியாளர் (சிவில்) காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதல்வர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
நகர் ஊரமைப்பு இயக்ககம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நகர் ஊரமைப்பு இயக்ககம், நகர்ப்புற திட்டமிடல், நிலப்பயன்பாட்டை ஒழுங்குப்படுத்துதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, குடியிருப்பு மற்றும் வணிக அபிவிருத்திகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் பணிகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் 24 அளவர், உதவி வரைவாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், நகர் ஊரமைப்பு இயக்குநர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பா. கணேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.