

தஞ்சாவூர்: ஆன்மிக அரசாகவே இந்த அரசு செயல்படுகிறது என்றும், மாதந்தோறும் முகூர்த்த நாளில் குடமுழுக்கு நடத்தி வருவதுடன், மாதந்தோறும் ஏதாவது ஒரு விழாவில் முதல்வரை கொண்டு வந்துவிடுகிறார் அமைச்சர் சேகர்பாபு என்றும் தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தெரிவித்தார்.
தஞ்சையில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,040-வது சதய விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாம் நாளான சனிக்கிழமை (நவ. 1) கோயில் ஓதுவார்களுக்கு புத்தாடை வழங்கி கெளரவிக்கப்பட்டது. தொடர்ந்து தேவார திருமுறைகள் மீட்ட ராஜராஜ சோழனைப் போற்றும் வகையில் யானை மீது திருமுறைகள் வைத்து ராஜ வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான ஓதுவார்கள் திருமுறைகளைப் பாடி வந்தனர்.
அதிகாரிச்சி என்று பெண் அதிகாரிகளை நியமித்த இராஜராஜ சோழன்
முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய தருமபுரம் 27 ஆவது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், உலகில் முதல்முறையாக பெண் அதிகாரிகளை அதிகாரிச்சி என்று பணிகளில் நியமித்தது ராஜராஜ சோழன் தான். அதேபோல் இந்த அரசும் தஞ்சை மாவட்டத்திற்கு பெண்ணை மாவட்ட ஆட்சியராக நியமித்தது கூடுதல் சிறப்பு என்று குறிப்பிட்டார்.
ராஜராஜ சோழன் போட்ட வித்து
நாடு முழுவதும் இன்று சைவம் போற்றப்படுகிறது என்றால் அதற்கு ராஜராஜ சோழன் போட்ட வித்துதான் காரணம். இந்த அரசு ஆன்மிக அரசாகவே செயல்படுகிறது. மாதந்தோறும் முகூர்த்த நாள்களில் குடமுழுக்கு நடத்தி வருகிறது. மாதம்தோறும் ஏதாவது ஒரு விழாவில் முதல்வரை கொண்டு வந்துவிடுகிறார் அமைச்சர் சேகர் பாபு.
இந்த அரசு செம்மையான பக்தி நெறியில் தலைப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.