பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ரூ.36 கோடி செலவில் 14 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும்....
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், தென்சென்னை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 125-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 அரசு சேமிப்பு பத்திரங்களை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், தென்சென்னை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 125-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 அரசு சேமிப்பு பத்திரங்களை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Updated on
2 min read

சென்னை: ரூ.36 கோடி செலவில் 14 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விரைவில் செலுத்தப்படும் என்றும் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்வதற்காக 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு மருத்துவ வாகன சேவை விரைவில் தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, அன்னை வேளாங்கன்னி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ், தென்சென்னை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 125-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 259 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 அரசு சேமிப்பு பத்திரங்கள் மற்றும் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியைச் சார்ந்த 118 இளம் பெண்களுக்கு அதிகபட்சமாக தலா ரூ.50,000 வரையிலான கசோலைகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் இன்றைக்கு மிக சிறப்பான வகையில் பயன்பெற்று வருகிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை பெண் சிசுக்கொலையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி பெண் கரு மற்றும் சிசு கொலைகளை தடுத்தல், குழந்தை திருமணங்களை தடுத்தல், நிதி பாதுகாப்பை மேம்படுத்துதல், பெண் கல்வியை மேம்படுத்துதல், ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் மனப்போக்குகளை மாற்றுதல், சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல், குழந்தை பாலின விகிதத்தை உயர்த்துதல் போன்றவைகள் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

முதலல்வர் இந்த திட்டத்தின் பலனை பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் சென்றடைய வேண்டும் என்கின்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக இதற்கு முன்பு இந்த திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.72,000 என்று இருந்ததை மாற்றி தற்போது ரூ.1,20,000 என்று உயர்த்தி இருக்கிறார்கள். அதேபோல் கருத்தடை செய்பவர்களின் வயது 40 என்று இருந்ததை 49 வயது என்று உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் இந்த திட்டத்தில் ஏராளமான பேர் பயன்பெறுகிறார்கள்.

புற்றுநோய் தடுப்பூசி திட்டம்

முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பெண் குழந்தைகளுக்கென்று பாதுகாப்பு திட்டங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், காலை உணவுத் திட்டம் என்று திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

38 மாவட்டங்களுக்கும் மருத்துவ வாகன சேவை

மகளிர்கள் 100% அனைவரும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளாக கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று ஏறத்தாழ 8 வகையான புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு முழுமையான பரிசோதனைகள் செய்யக்கூடிய ஒரு திட்டம், வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி முழு பரிசோதனை வசதிகளுடன் கூடிய அந்த வாகனம் விரைவில் முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக அந்த திட்டம் இங்கு செயல்படுத்தப்படவிருக்கிறது. 38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

அதேபோல் முதல்வர் பெண் குழந்தைகளை பாதுகாத்திடும் வகையில் 2025-26ஆம் நிதி ஆண்டில் ரூ.36 கோடி செலவில் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த தொடங்கப்படவிருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளுக்கு அதிகம் செலவு ஆகும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடுவதற்கு முதல்வர் இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் மட்டும் 118 பெண் குழந்தைகளுக்கு அதாவது 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வரை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் 259 குழந்தைகளை பயனாளிகளாக தேர்வு செய்து அவர்களுக்கு சேமிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆக 259 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு பத்திரமும், 118 பேருக்கு முதிர்வுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

அதோடுமட்டுமல்லாமல் குறைந்த வயதில் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்குரிய உறுதிமொழியும் அதற்கு எதிராக கையெழுத்து பிரசாரமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Summary

Cervical cancer vaccination program for girls says Minister M. Subramanian informs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com