

திருச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த மின்னஞ்சலில் திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோருடைய வீடுகளுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து உடனடியாக வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே. என். நேருவின் வீடு மற்றும் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடு ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், இந்த இரு இடங்களிலும் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. வதந்தியை ஏற்படுத்தும் வகையில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சமீபகாலமாக, தமிழகத்தில் அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், நடிகர், நடிகைகளின் வீடுகள், அரசு அலுவலகங்கள், விமானங்கள், விமான நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நாள்தோறும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது குறித்து தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து வரவில்லை. ஏனெனில் சட்ட விரோதச் செயலுக்கு பயன்படுத்தப்படும் டார், விபிஎன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பப்படுவதால், அதை வைத்து துப்பு துலக்குவதில் தொடர்ந்து இடர்ப்பாடு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் இருவர் இருப்பதும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.