

உலகில் காலநிலை இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 80,000 பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பான் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான ஜெர்மன்வாட்ச் வெளியிட்ட சமீபத்திய காலநிலை ஆபத்து குறியீட்டு (சிஆர்ஐ) அறிக்கையின்படி, கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை தொடர்பான இயற்கை பேரிடர்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 ஆவது இடத்தில் உள்ளது. 2023 இல் எட்டாவது இடத்தில் இருந்தது.
பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 மாநாட்டில் 'பருவநிலை அபாய குறியீடு 2026' எனும் தலைப்பில் ஜெர்மன்வாட்ச் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில், உலகயளவில் 1995 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரிடர்களால் 8.32 லட்சம் பேர் இறந்துள்ளனர், 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ரூ.15,000 கோடி அளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 80,000 பேர் இறந்துள்ளனர், இது உலகளாவிய எண்ணிக்கையில் சுமார் 9.6 சதவீதம் ஆகும்.
இதில் அதிகம் பாதித்த நாடாக டொமினிகா உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா நாடுகளுக்கு அடுத்ததாக, இந்தியா 9 ஆவது இடத்திலும், பஹாமாஸ் நாடுகள் 0 ஆவது இடத்திலும் உள்ளன.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வறட்சி, சூறாவளி, வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம், புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடங்கள் போன்ற 430 இயற்கை பேரிடர்கள் பதிவாகியுள்ளன. இதனால் சுமார் 13 லட்சம் கோடி அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, 80,000 பேர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
1993 இல் வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளம், 1998 குஜராத் புயல், 1999 ஒடிசா சூப்பர் புயல்கள், 2013 உத்தரகண்ட் வெள்ளம் மற்றும் 2019 இல் நிகழ்ந்த கடும் வெள்ளம், 2014 மற்றும் 2020 ஆண்டுகளில் ஹுத்ஹுட் மற்றும் ஆம்பன் புயல்கள் ஆகியவை அதிக உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 இல் குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் லட்ச கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் சூறாவளிகளால் கடலோரப் பகுதிகள் பேரழிவுகளை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், 1998, 2002, 2003 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலையுடன் கூடிய தொடர்ச்சியான மற்றும் வழக்கத்திற்கு மாறான கடுமையான வெப்ப அலைகளால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
India has been ranked 9th in the list of countries worst affected by climate-related disasters in the last 30 years, according to the latest Climate Risk Index (CRI) report released by Germanwatch...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.