

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைத்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வியாழக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது எதிரே அதிவேகமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தினேஷ் (20), சாஜன் (26) பாலமுருகன்(19) ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களில் காரை பகுதியை சேர்ந்த தினேஷ் (20), வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சாஜன் (26) மற்றும் ஆற்காடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) என விசாரணையில் தெரியவந்தது.
விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.