

ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயமாட்டோம்; மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சிக்கான போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மசோதா மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியாது. அதேபோல, ஆளுநர்கள் உரிய காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க உத்தரவிட முடியாது என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மாநில உரிமைகள் மற்றும் உண்மையான கூட்டாட்சிக்கான எங்கள் போராட்டம் தொடரும்!
ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க அரசியலமைப்பை திருத்தும்வரை நாங்கள் ஓயமாட்டோம்!
உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழ்நாடு அரசு பெற்ற தீர்ப்பில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் இரண்டு அரசுகள் செயல்படக்கூடாது.
அரசியலமைப்புக்கான நீதிபதிகள், அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயல்பட வேண்டுமே தவிர, அதற்கு மேல் ஒருபோதும் செயல்படக்கூடாது.
மசோதாவை ரத்து செய்யவோ, பாக்கெட் வீட்டோவைப் போல (மசோதா சட்டமாக மாறுவதைத் தடுப்பது) பயன்படுத்தவோ ஆளுநருக்கு நான்காவது வழி இல்லை. அதேபோல வெறுமனே நிறுத்திவைக்கவும் அவருக்கு வழி இல்லை.
ஆளுநர் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காலவரையின்றி தொடர்ந்து தாமதப்படுத்த முடியாது. ஆளுநர் ஒரு மசோதாவை பரிசீலிப்பதற்கு காலத்தாமதம் செய்தால், நீதிமன்றத்தை அணுகி, ஆளுநர்கள் வேண்டுமென்றே செய்யும் செயல்களுக்குப் பொறுப்பேற்கச் செய்யலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ரவி, நீண்ட காலமாக கிடப்பில் போட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி, தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவி்ட்டதாக அறிவித்தனர்.
சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டனர்.
பின்னணி?
இந்த உத்தரவையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,கடந்த மே 13 அன்று அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அந்தத் தீர்ப்பில், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்த பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட முடியாது.
மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் விளக்கத்துடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது.
மசோதவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் இயக்கும் முதன்மையான அதிகார அமைப்பாக இருக்க முடியும். மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை ஆளுநர்கள் மேற்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.