

கொல்கத்தா: வங்கதேசத்தின் நா்சிங்டியில் என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை காலை(நவ.21) ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் உணரப்பட்டது. கொல்கத்தாவில் வீடு, கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வங்கதேசத்தின் நா்சிங்டி தென்மேற்கே வெள்ளிக்கிழமை காலை 10.8 மணிக்கு 13 கி.மீ தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டாக்காவிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் பீதியடைந்து கட்டடங்களில் இருந்து அவசரமாக வெளியேறினா்.
நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் டாக்காவில் 3 பேரும், புறநகா்ப் பகுதியான நாராயண்கஞ்சில் ஒருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். நிலநடுக்கத்தின் மையப் பகுதியான நா்சிங்டி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகின. நாடு முழுவதும் 252 போ் காயமடைந்ததாக தகவல்கள் வெளியானது.
30 வினாடிகள் குலுங்கிய கட்டடம்
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவில் வசிக்கும் பலர் தங்கள் எக்ஸ் பக்கத்தில், கொல்கத்தாவில் வீடுகள், கட்டடங்கள் 30 வினாடிக்கு மேலாக குலுங்கியதாகவும், தனது வாழ்வில் சந்தித்த மிக தீவிர நிலநடுக்கத்தை இப்போதுதான் பார்த்தேன் என்றும், கொல்கத்தா நகரம் பிளாஸ்டிக் குகைபோல் குலுங்கியது என தெரிவித்துள்ளனர். "அந்த நிலநடுக்கம் ஒருவரை தூக்கத்திலிருந்து எழுப்பும் அளவுக்கு வலிமையானது" என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் பிற மாவட்டங்களில் பலர் தெருக்களில் கூடினர். நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் எதுவும் இல்லை.
திரிபுராவின் தர்மநகர், மேகாலயாவின் துரா மற்றும் சிரபுஞ்சி மற்றும் மிசோரமின் ஐசாவல் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மற்றும் யூரேசிய புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் வங்கதேசம் அமைந்துள்ளதால் அந்த நாட்டின் வடக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் நீண்டகாலமாகவே கூறிவருகின்றனா். ஆனால், நாட்டின் மத்தியப் பகுதிகளில் நிலநடுக்க அபாயம் குறைவு என்று கருதப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.