
மணிலா: சில நாட்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்ட மத்திய பிலிப்பின்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் கடுமையான நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருளில் அவதியடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிலிப்பின்ஸின் செபு மாகாணத்தில் உள்ள சுமார் 90,000 மக்கள் வசிக்கும் கடலோர நகரமான போகோ நகரில் உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை இரவு 7.29 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலவரப்பில் இருந்து 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை முதலில் 14 பேர் பலியானதாகவும், பின்னர் 27 பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், தற்போது 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மீட்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போகோவில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
போகோவிற்கு அருகில் உள்ள மெடலின் நகரில், வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தபோது குறைந்தது 12 பேர் பலியாகினர். அதேபோன்று சான் ரெமிகியோ நகரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டிலிருந்து பாதுகாப்பாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று கடலோர காவல்படை வீரர்கள், ஒரு தீயணைப்பு வீரர் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் தனித்தனியாக சுவர்கள் இடிந்து விழுந்ததில் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போகோ அதனைச் சுற்றி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில் மிகவும் பேரழிவு ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றான பிலிப்பின்ஸ், கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளதால் அடிக்கடி நிநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. மேலும் பிலின்பின்ஸ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளிகளாலும் புயல்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை மத்தியப் பகுதியைத் தாக்கிய வெப்பமண்டலப் புயலில் சிக்கி 27 பேர் பலியாகினர். இந்த பாதிப்பில் இருந்து செபு மற்றும் பிற மாகாணங்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், மத்திய பிலிப்பின்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகள் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது மற்றும் நிலநடுக்க பயத்தில் உறைந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.