அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்கோப்புப்படம்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

கரூர் விவகாரதில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on

கரூர் விவகாரதில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் நினைவு நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கும் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மொழிவாரி மாகாணங்கள் பிரித்த போது திருத்தணியை பொருத்தவரை ஆந்திரத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியபோது எக்காரணம் கொண்டும் ஆந்திரத்திற்கு திருத்தணியை கொடுக்க மாட்டோம் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தவர் மா.பொ.சி.

சென்னையை ஆந்திர மாநிலத்திடம் கொடுக்க முற்பட்டபோது தலை கொடுத்தாலும் தலைநரை காப்போம் என்று சென்னையை தமிழ்நாட்டோடு இருக்க செய்தவர். சிலப்பதிகாரத்திற்கு மாநாடு நடத்தியவர் மா.பொ.சி.

தான் படிக்கவில்லை என்றாலும் தமிழில் புலமை பெற்று அதன் மூலம் பல புத்தகங்கள் எழுதியவர். அவரின் எழுத்தாற்றல் எல்லோரும் போற்றக்கூடிய வகையில் உள்ளது.

தமிழ்நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளோம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு,

வயதானவர்களை குறிவைத்து கொலை செய்வது, ஆள் கடத்துவது உள்ளிட்டவற்றில் நாட்டிலேயே 4 ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இது எவ்வளவு பெரிய கேவலம். மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வக்கில்லை துப்பில்லை.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து எல்லாம் சாதாரணமாக நடக்கிறது. விலைவாசி உயர்ந்து மக்கள் நிம்மதி இல்லாமல் வாழும் நிலை உள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கலை திமுகவுக்கு கைவந்த கலை.

கொஞ்சம்கூட கூச்சம் நாச்சம் இல்லாமல் பரங்கி மலையை விழுங்கும் அளவிற்கு ஆகாய சூரர்கள் என்றால் திமுகவை சொல்ல வேண்டும்.

மாநிலத்தின் உரிமை இவர்கள்தான் பேணிகாக்கிறார்கள், விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள், தமிழ்நாட்டின் உரிமையை தாரை வார்த்து அவர்கள் கொடுத்த எண்ணற்ற வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு ரூ.1,000 கொடுத்ததை சொல்லிக் காட்டுகிறார்கள்.

வாய் கூசாமல் பொய் சொல்கிறோமே மக்கள் ஏளனம் செய்ய மாட்டார்களா என்ற எண்ணம் கொஞ்சம் கூட அவர்களுக்கு இல்லை. யார் நம்மைப் பார்த்து சிரித்துவிட்டு போனாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமலும், நெஞ்சில் ஈரம் இல்லாமல் பொய்யையே மூலதனமாக வைத்து வாய் கூசாமல் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்வது வேடிக்கையாக விந்தையாக எள்ளி நகையாடக் கூடிய வகையிலும், மக்கள் கைகொட்டி சிரிக்கும் அளவிற்குதான் திமுக ஆட்சியின் அவல நிலை உள்ளது.

தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்டோர் பேசுவது குறித்த கேள்விக்கு, கரூர் விவகாரத்தில் பாதுகாப்பு வழங்கவேண்டியது அரசின் முக்கியத்துவம் வாய்ந்த செயல். நுண்ணறிவுப் பிரிவு காவல்துறைக்கு அடிப்படையான கூட்டம் வரும் என்பதை கொடுத்துள்ளதா என தெரியவில்லை. ஆனால் கூட்டத்துக்கு போதுமான அளவுக்கு பாதுகாப்பை கொடுக்கவில்லை. அதை விட்டுவிட்டு அரசு அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க செய்கிறார்கள். அரசினுடைய தவறுகளை மூடி மறைக்க அரசு அதிகாரிகளை பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கது.

சிபிஐ விசாரணைக்கு ஏன் திமுக தயங்குகிறது? கரூர் விவகாரம் தொடர்பாக நாள்தோறும் இரண்டு விடியோ வந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பு விசாரணை அல்லது சிபிஐ முழுமையாக விசாரணையில் இணைந்தால் மட்டுமே போதுமானது.

அப்போதுதான் உண்மை உலகிற்கு வெளியே வரும். சிபிஐ விசாரணை நடத்தினால்தான் யார் தவறு செய்தது என தெரிய வரும்.

விசாரணையின் முடிவில் தவெக தவறு செய்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். இந்த அரசு விஜய் மீதுள்ள வன்மத்தைதான் காட்டுகிறது. திமுகவுக்கு மலிவான அரசியல் கைவந்த கலை என்றார்.

Summary

Why is the Tamil Nadu government hesitant to conduct a CBI investigation into the Karur case?: Jayakumar questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com