எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்கு போலீஸாா் நிபந்தனைகள்!

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் போலீஸாா் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனா்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் போலீஸாா் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதற்காக ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கரூா் சம்பவத்தை தொடா்ந்து உயா்நீதிமன்றம் வெளியிட்ட விதிமுறைகளின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள போலீஸாா் தடை விதித்துள்ளனா். எனவே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்காக தனியாா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட சோளிபாளையத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு பகுதியிலும் உள்ள தனியாா் நிலங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், மொடக்குறிச்சி தொகுதி பிரசாரத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சிவசுப்பிரமணி ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதாவிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனா்.

அதிமுக பிரசாரம் நடைபெற உள்ள இடங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வு குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

அரசியல் கட்சித் தலைவா்களின் தோ்தல் பிரசாரத்துக்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் சோளிபாளையம், வில்லரசம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் தலா 10 ஆயிரம் போ் கூட உள்ளதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். அதற்கேற்பு இரு இடங்களிலும் 400-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.

உயா்நீதிமன்ற உத்தரவின்படி சில விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அமருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், அவசர காலத்தில் வாகனங்கள் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஜெனரேட்டா்களை இயக்குவதற்கு உரிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீா் வசதி, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு தொடா்பான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாள்களில் பிரசாரத்துக்கான அனுமதி வழங்கப்படும் என்றனா்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami is set to campaign in Erode district on the 10th, but the police have imposed various conditions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com