
கத்தார்: காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் அனைத்து விதிகள் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்தும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான மஜீத் அல் அன்சாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கியது என்று அன்சாரி கூறினார்.
இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து சுமாா் 251 பேரை பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, அதற்கான எதிர்வினையாக இஸ்ரேல் படைகள், காஸாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய தாக்குதல்கள், இன்றளவும் தொடருகின்றன. இதில் இதுவரை 20,179 குழந்தைகள் உள்பட 67,183-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா்; 1,64,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காஸா உருக்குலைந்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட பல கட்ட முயற்சிக்குப்பின், காஸா போர் நிறுத்தத்துக்கான டொனால்ட் டிரம்பின் 20 நிபந்தனைகளை உள்ளடக்கிய விரிவானதொரு திட்டத்தை இஸ்ரேல் செப். 29 இல் ஏற்றுக்கொண்டதாக அறிவித்ததை அடுத்து, ஹமாஸ் தரப்பின் சம்மதத்தை எதிர்நோக்கி சர்வதேச சமூகம் காத்திருந்தது.
இந்த நிலையில், காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் அனைத்து விதிகள் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்தும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான மஜீத் அல் அன்சாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:
"காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் அனைத்து விதிகள் மற்றும் செயல்படுத்தல் வழிமுறைகள் குறித்து புதன்கிழமை இரவு ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மத்தியஸ்தர்கள் அறிவித்துள்ளனர். இது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், இஸ்ரேலிய பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கும், உதவிகள் வழங்குவதற்கும் வழிவகுக்கும். இது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இது "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்" என்று பாராட்டியுள்ளார், "நாளை(வியாழக்கிழமை) அரசாங்கத்தை கூட்டி ஒப்பந்தத்தை அங்கீகரித்து, கடத்தப்பட்ட நமது விலைமதிப்பற்ற மக்களை வீட்டிற்கு அழைத்து வருவேன்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக நெதன்யாகு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது: காஸாவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுக்குப் பின்னால் தேசம் ஒன்றுபட்டுள்ளதாகக் கூறினார்.
"கடத்தப்பட்ட நமது மக்களை விடுவிக்கும் இந்த புனிதமான பணிக்கு அவர்கள் அளித்த அர்ப்பணிப்புக்காக" இஸ்ரேலிய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
"கடவுளின் உதவியுடன், நாங்கள் எங்கள் அனைத்து இலக்குகளையும் தொடர்ந்து அடைவோம், எங்கள் அண்டை நாடுகளுடன் அமைதியை விரிவுபடுத்துவோம்" என்று நெதன்யாகு கூறியுள்ளார்.
பாலஸ்தீனக் குழுவும் இஸ்ரேலும் "எங்கள் அமைதித் திட்டத்தின் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதிலிருந்து ஹமாஸ் தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் டெலிகிராமில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆக்கிரமிப்பில் இருந்து விலகுதல், உதவி வழங்குதல் மற்றும் பிணைக் கைதிகள் பரிமாற்றம்" ஆகியவற்றை நிர்ணயிக்கும் ஒரு ஒப்பந்தத்தின் முடிவை" அறிவித்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
மேலும், "இஸ்ரேல் ஒப்பந்தத்தின் தேவைகளை முழுமையாக செயல்படுத்த கட்டாயப்படுத்தவும், ஒப்புக் கொள்ளப்பட்டதை செயல்படுத்துவதைத் தவிர்க்கவோ அல்லது தாமதப்படுத்தவோ அனுமதிக்கக்கூடாது" என்று அமெரிக்கத் தலைவர்களுக்கு அரபு மத்தியஸ்தர்கள் மற்றும் சர்வதேச கட்சிகள் அழைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், "எங்கள் உறுதிமொழிக்கு உண்மையாக இருப்போம், சுதந்திரம், சுதந்திரம் மற்றும் சுயநிர்ணயம் உள்ளிட்ட நமது மக்களின் தேசிய உரிமைகளை கைவிட மாட்டோம்" என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.