
புதுதில்லி: தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிப்பறைகள் குறித்து தகவல் அளித்தால், "ரூ.1,000 வெகுமதி வழங்கப்படும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒரு சிறப்பு தூய்மை பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சுங்கச் சாவடிகளில் உள்ள கழிப்பறைகள் சுத்தமில்லாமல் அசுத்தமாக இருந்தால் அதுகுறித்து தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் வாகனங்களின் பாஸ்டேக் கில் ரூ. 1000 ரீசார்ஜ் செய்யப்படும்.
இந்த பரிசுத் திட்டம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
இந்த திட்டத்தின் கீழ் ரூ. 1,000 வெகுமதி பெறுவதற்கு ‘ராஜ் மார்க் யாத்ரா’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில், பெயர், எந்த இடத்தில் சுங்கச்சாவடி கழிப்பறை உள்ளது, தங்கள் வாகனத்தின் பதிவு எண், செல்போன் எண் போன்ற தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
அத்துடன் அசுத்தமாக இருக்கும் கழிப்பறை தொடர்பான புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றை ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் ‘பாஸ் டேக்’கில் ரூ.1,000 ரீசார்ஜ் செய்யப்படும்.
ஒரு வாகனம் எத்தனை வெகுமதிகளைப் பெற முடியும்?
ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இந்த வெகுமதியைப் பெறுவதற்கு பயன்படுத்த முடியும். இந்த வெகுமதித் தொகையை பணமாகேவா மற்றும் வேறு யாருக்கோ மாற்ற முடியாது.
ஒரே கழிப்பறை குறித்து ஒரே நாளில் பல புகார்கள் வந்தால், முதலில் வரும் புகார் மட்டுமே செல்லுபடியாகும்.
அனைத்துக் கழிப்பறைகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா?
தேசிய நெடுஞ்சாலைத் துறையால் கட்டடப்பட்ட, இயக்கப்படும் அல்லது பராமரிக்கப்படும் சுங்கச் சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத பிற பொது வசதிகளில் உள்ள கழிப்பறைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.