
டெல் அவிவ்: இஸ்ரேலில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியைப் பெற்றது இஸ்ரேல் ராணுவம்.
இறந்த பிணைக்கைதி ரோனன் டாமி ஏங்கல் என அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து அவரது உடலை நல்லடக்கம் செய்யவதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதன் விளைவாக பெண்கள், குழந்தைகள் உள்பட 100 பிணைக் கைதிகளை ஹமாஸும், சில பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன.
இரண்டாவது முறையாக நிகழாண்டு ஜனவரி-பிப்ரவரியில் 25 இஸ்ரேல் பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த 8 பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. அதைத் தொடா்ந்து, 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தது.
கடந்த மாா்ச் மாதம் தற்காலிக போா்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. 2023, அக். 7-இல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போா் நடைபெற்று வந்த நிலையில், இதனை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் முன்மொழிந்தாா். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக இருதரப்பு பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க குழுவினா் இடையே எகிப்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமா்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023, அக். 7 தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமாா் 20 பிணைக் கைதிகள் மற்றும் சுமாா் 27 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு செய்தது.
அதன்படி, இஸ்ரேல் பிணைக்கைதிகளில் உயிருடன் உள்ளவர்களில் 7 பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக 13 பேரை அக். 13 இல் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் தரப்பு ஒப்படைத்தனர். இதன்மூலம், இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்ட மக்களில், உயிருடன் இருந்த அனைத்து பிணைக்கைதிகளும்(20 பேர்) விடுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியை ஞாயிற்றுக்கிழமை(அக்.19) பெற்றது இஸ்ரேல் ராணுவம். இறந்த பிணைக்கைதி ரோனன் டாமி ஏங்கல் என்பது அடையாளம் கண்டுள்ளதை அடுத்து அவரது உடல் அடக்கம் செய்ய அனுப்பப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஏங்கல் மரணத்திற்கு இஸ்ரேஸ் ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேஸ் ராணுவம் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
2023 அக்டோபர் 7 ஆம் தேதி ரோனன் டாமி ஏங்கல்(54), நிர் ஓஸில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஹமாஸ் படையினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார், மேலும் அவரது உடல் காசாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு ஒரு மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு சகோதர் உள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸ் படையால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட 11 ஆவது பிணைக்கைதியான ரோனன் உடல் திரும்பப் பெற்றது. அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அனுப்பப்பட்டதாக இஸ்ரேஸ் ராணுவம் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
மேலும், ரோனன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இஸ்ரேலிய ராணுவம், கொல்லப்பட்ட அனைத்து பிணைக்கைதிகளையும் அவர்களின் குடும்பத்தினரிடம் திருப்பி ஒப்படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி தனது பங்கை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் அனைத்து பிணையக்கைதிகளையும் அவர்களின் குடும்பங்களிடம் திருப்பி ஒப்படைக்கவும், அவரது உடல்களை முறையாக அடக்கம் செய்வதற்கான தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேஸ் ராணுவம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.