
ஹைதராபாத்: பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகை நேரடியாக பெற்றோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக மாநில அரசு விரைவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாக தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஷில்பகலா வேதிகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கி முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.
அப்போது, அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனிக்கவில்லை என்றால், உங்களது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்து செய்யப்பட்டு அது நேரடியாக உங்களது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நான் நிச்சயமாக உறுதி செய்வேன். அரசு ஊழியர்களின் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டவுடன், அவர்களது பெற்றோர்களின் வங்கி கணக்கிலும் சம்பளத்தின் ஒரு பகுதி தானாகவே வரவு வைக்கப்படும். இதற்காக விரைவில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இதற்காக முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான வரைவு குறிப்பைத் தயாரிக்க புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்க தலைமைச் செயலாளர் கே ராமகிருஷ்ண ராவுக்கு உத்தவிட்டிருப்பதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
மேலும், புதிதாகப் பணி நியமனம் பெற்ற நீங்கள் "உங்களது பெற்றோரின் கடின உழைப்பு மற்றும் தியாகங்களால் அதிகாரிகளாகிவிட்டீர்கள். எனவே உங்கள் பின்னணியையோ, எங்கிருந்து வந்தீர்கள் என்பதையோ நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது" என்று வலியுறுத்தியவர், நீங்கள் எந்த அதிகாரப் பதவியில் இருந்தாலும், ஒரு ஏழை உங்கள் முன் நிற்கும்போது, அவர்களை உங்கள் சொந்த பெற்றோராக நினைத்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், முந்தைய பிஆர்எஸ் ஆட்சியை விமரிசனம் செய்த ரேவந்த், முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வேலையின்மையை போக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும், ஒரு குரூப்-1 பதவியைக் கூட நிரப்பவில்லை என்றார்.
குரூப்-2 பதவிகளுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்ததாகவும், இதில், சுமார் 2 லட்சம் பேர் தேர்வெழுதியதாகவும், அவர்களில் 783 பேர் தெலங்கானா அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ரேவந்த் கூறினார்.
அரசு துறைகளில் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு நீதிமன்ற வழக்குகள் தடைகள் இருந்தபோதிலும், காங்கிரஸ் ஆட்சியின் முதலாம் ஆண்டில் சுமார் 60,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், "சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிஜாம், அதானி மற்றும் அம்பானியுடன் சொத்து குவிப்பதில் போட்டியிட்டனர். அவரது 10 ஆண்டுகால ஆட்சியில், தனது மருமகனை அம்பானியாகவும், தனது மகளை பிர்லாவாகவும் மாற்ற வேண்டும் என்று கேசிஆர் கனவு கண்டதாக கூறினார்.
விவசாயத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.1 கோடி சம்பாதித்ததாக கூறிய கே. சந்திரசேகர் ராவ், இந்த ரகசியத்தை ஏன் விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? என்று கேள்வி எழுப்பியவர், பி.ஆர்.எஸ் தலைவர்கள் மாநிலத்தை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டினார்.
மேலும், எஸ்சி துணை பிரிவு உட்பட நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பல பிரச்னைகளை அரசு தீர்த்து வைத்துள்ளதாகவும், மாநிலத்தில் சாதி கணக்கெடுப்பை முடித்துள்ளதாகவும் ரேவந்த் கூறினார்.
நாடு முழுவதும் சாதி கணக்கெடுப்பை நடத்த பிரதமரை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.