நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுகவினா் இன்று ஆலோசனை
சென்னை: பருவமழை பாதிப்புகளைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து திமுக தலைமை புதன்கிழமை (அக். 22) ஆலோசிக்க உள்ளது.
இதுகுறித்து, அந்தக் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: பருவமழையின் போது திமுகவினா் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. இதற்கான கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கட்சியின் முதன்மைச் செயலரும் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையிலும், இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் மற்றும் பூந்தமல்லி நகராட்சிக்குள்பட்ட மாவட்டச் செயலா்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மேயா்கள், துணை மேயா்கள், கவுன்சிலா்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலா்கள் பங்கேற்க வேண்டும் என்று கட்சித் தலைமையின் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.