

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டதை அடுத்து பார்வையாளர்களுக்கான நுழைவுக் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.24) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.42.45 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பூங்கா பணிகள் நிறைவுற்று 22.1.2011 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை மேம்படுத்திட ஜூலை 2021-ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக ‘தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு’பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு ரூ.42.45
கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு
கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
‘தொல்காப்பியப் பூங்கா’, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு, சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகின்றது. இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 3.20 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அக். 1 ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
அதன்படி, இன்றைய தினம் தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மீண்டும் கொண்டுவரப்பட்டது.
மேலும், முதலல்வர் சுற்றுச்சூழல் கல்வியினை குறிப்பாக சென்னை மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெற்றிடும் வகையில், மாணவர்களுக்கான பிரத்யேக சுற்றுச்சூழல் கல்விச்சுற்றுலா ஏற்பாடுசெய்யவும், தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிடும் அனைத்து மாணவர்களுக்கும் (அரசு, தனியார் பள்ளி) ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி வழங்கிடவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்கள் (ஒருவேளையில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் பொது விடுமுறை நாட்கள் தவிர இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம்.
மேலும், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் (பள்ளி,கல்லூரி) அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம்.
பள்ளிகள் அனுமதிக்கப்படும் நாட்கள்: சென்னை மாநகராட்சி பள்ளிகள் - செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை; அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் - வெள்ளிக்கிழமை; தனியார் பள்ளிகள் - திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை.
பூங்காவின் பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை விடப்படும்.
அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
தொல்காப்பியப் பூங்கா – பார்வையாளர்கள் நேரம் மற்றும் நுழைவு கட்டண விவரங்கள்
மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி
கல்வி நிறுவனங்கள் (பள்ளி /கல்லூரி)
(அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதள முன்பதிவு மூலம்)
திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை
பள்ளிகள் அனுமதிக்கப்படும் நாட்கள்
- சென்னை மாநகராட்சி பள்ளிகள்: செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை
- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள்: வெள்ளிக்கிழமை
- தனியார் பள்ளிகள்: திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை
பொது மக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம்
(அதிகபட்சம் 100 நபர்கள், இணையதள முன்பதிவு மூலம்)
திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (வியாழக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) (பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை)
பொது மக்களுக்கான நடைப்பயிற்சி
(பதிவுசெய்யப்பட்ட நடைப்பயிற்சி /ஒரு முறை நுழைவு)
(அதிகபட்சம் 100 நபர்கள் இணையதள முன்பதிவு மூலம்)
அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட) காலை: காலை 6.30 மணி முதல் காலை 8.00 மணி வரை மாலை: மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
நுழைவுக் கட்டண விவரங்கள்:
1. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் - ஒரு நபருக்கு ரூ.10.
2. பொது மக்களுக்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் - ஒரு நபருக்கு ரூ.20
3. நடைப்பயிற்சி அனுமதி ஒரு முறை நுழைவு - ஒரு நபருக்கு ரூ.20
4. நடைப்பயிற்சி அனுமதி (பதிவு செய்யப்பட்ட நடைப்பயிற்சி அனுமதி இணையதள பதிவு வாயிலாக) - ஒரு மாதத்திற்கு ரூ.500, மூன்று மாதங்களுக்கு ரூ.1,500, ஆறு மாதங்களுக்கு ரூ. 2,500, ஆண்டுக்கு ரூ.5,000
வாகனங்களுக்கான கட்டண விவரங்கள்:
மகிழுந்து - ஒன்றிற்கு ரூ.20
சிற்றுந்து, பேருந்து - ஒன்றிற்கு ரூ. 50
புகைப்பட கருவி - ஒன்றிற்கு ரூ.50
ஒளிப்பதிவு கருவி - ஒன்றிற்கு ரூ.100 வசூலிக்கப்படும்.
மேலும், நுழைவுச்சீட்டு கட்டணம், முன்பதிவு மற்றும் பிற விவரங்களை www.crrt.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.