ஆண்டுதோறும் சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து சாதனை!

தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
3 min read

சென்னை: தமிழகத்தில் திராவிட மாடல் அரசு நெல் கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகள் செய்து வருவதாகவும், கடந்த நான்காண்டுகளில் சராசரியாக 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், தேர்தல் வாக்குறுதிப்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு உழைத்து விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லில் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று கூறி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாப்புடன் சேமித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தைய ஆட்சிக்காலத்தை விடக் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது.

திராவிட மாடல் அரசு விவசாயிகளைப் பாதுகாப்பதில், அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதில் எப்பொழுதும் முன்னுரிமை கொடுத்து வந்துள்ளது. கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ. 7 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்து 2006 இல் ஆட்சிப் பொறுப்பேற்ற விழா மேடையிலேயே ஆணை வழங்கி உத்தரவிட்டார். அதன்பிறகு இந்தியா முழுவதும் ரூ.70 ஆயிரம் கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது வரலாறு.

கருணாநிதி 1972 இல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி அதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதிலும் நெல் கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி கொள்முதல் செய்யப்படும் முறையை தமிழ்நாட்டிற்கெனத் தனியே உருவாக்கினார்.

அந்த நடைமுறையின் படிதான் தற்போதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்தியதுடன் விவசாயப் பெருமக்களையும், அவா்களது வாழ்க்கைத் தரத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உயா்த்தி வருகிறாா். கடந்த 4 ஆண்டுகளில் 68,919 விவசாயிகளுக்கு ரூ.576.20 கோடியில் வேளாண் இயந்திரங்களும், நவீன கருவிகளும் மானியங்களுடன் வழங்கப்பட்டுள்ளன. ரூ.98 கோடி மதிப்பில் 1,215 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு சிறு விவசாயிகளுக்கும் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2012-2013 முதல் 2020-2021 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளா்ச்சி விகிதம், 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயா்ந்து மகத்தான சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசின் வேளாண்துறை. மாநில அரசின் சார்பாக, விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை 1974 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதன்முதல் அறிவித்து வழங்கி நடைமுறைப்படுத்தியவர் கருணாநிதி.

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபின் 2021 -2022 ஆம் ஆண்டிற்குப்பின் மத்திய அரசு சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதலாக ரூ.100-ம், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம் உயர்த்தித் தந்தார். நடப்பாண்டில் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையை விட சன்னரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ.156-ம், பொதுரக நெல்லிற்கு ரூ.131-ம் கூடுதலாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளிலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51 ஆயிரத்து 469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் மட்டுமே.

அதே நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிற்குப்பின் 2024 - 2025 ஆண்டு வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மொத்தம் 1 கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 545 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பு நெல் கொள்முதல் பருவம் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி 24.10.2025 வரை 1,853 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 10.40 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொள்முதல் செய்யப்பட்ட 10.40 லட்சம் மெ.டன்களில் 8.77 லட்சம் மெ.டன் மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டுவிட்டது. மீதம் 1.63 லட்சம் மெ.டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திருவாரூர் மாவட்டத்தில் 53,831 மெ.டன் நெல்லும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 23,125 மெ.டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 16,793 மெ.டன் நெல்லும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 21,537 மெ.டன் நெல்லும் நகர்வு செய்யப்படவேண்டும்.

21.10.2025-க்குப் பிறகு தஞ்சாவூரிலிருந்து நாள்தோறும் 4 ரயில்களும் (7,000 மெ.டன்), திருவாரூரிலிருந்து 5 ரயில்களும் (9,000 மெ.டன் முதல் 10,000 மெ.டன் வரை), மயிலாடுதுறையிலிருந்து 2 ரயில்களும் (4,000 மெ.டன்), நாகப்பட்டினத்திலிருந்து 1 ரயிலும் (2,000 மெ.டன்) இயக்கப்பட திட்டமிடப்பட்டு நகர்வு செய்யப்படுகிறது. திருவாரூரிலிந்து மட்டும் 48,000 மெ.டன் நகர்வு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ஆம் தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்தாா்கள்.

அந்த கோரிக்கையை ஏற்று கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு தமிழ்நாட்டில் நெல் ஈரப்பதத்தினை ஆய்வு செய்திட மூன்று வல்லுநா் குழுக்களை நியமித்து ஆணையிட்டது. அதன்படி, நிபுணா் குழுவினா் வருகை புரிந்துள்ளனா்.

முதல்வர் ஸ்டாலின் 2.10.2025 அன்று நெல் கொள்முதல், நகர்வு குறித்து ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து வட்ட வாரியாக குழுக்கள் அமைத்து ரயில் மூலமாக அதிகமாக நகர்வு செய்யப்பட்டு வருகிறது. உணவுத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் குழு டெல்டா மாவட்டங்களில் 10.10.2025, 11.10.2025 ஆகிய நாள்களில் ஆய்வு செய்து கொள்முதல் மற்றும் நகர்வுப் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் பேசி டெல்டா மாவட்டங்களுக்கு தினசரி 13 சரக்கு ரயில்கள் அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது. ரயில்வே நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் நேரம் மாலை 6 மணியிலிருந்து 8.மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிக கொள்முதல் நடைபெறும் 13 மாவட்டங்களில் கூடுதலாக 127 பாப் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதிக நெல் வரத்து இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 19.10.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 5,510.4 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் திருவாரூரில் அதிக நெல் இருப்பு உள்ளதால் அதனை நகர்வு செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாரியாக பொறுப்பு அளித்து கூடுதலாக 2 பொது மேலாளர்கள், 64 கண்காணிப்பாளர்கள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் 4000 லாரிகள் மூலமாகவும், 13 முதல் 15 ரயில்கள் மூலமாகவும் நெல்கள் பாதுகாப்பாக கிட்டங்கிகளுக்கு தினசரி 35,000 மெ.டன் என்ற அளவில் திட்டமிட்டு நகர்வு செய்யப்படுகிறது.

100 சுமை தூக்கும் பணியாளர்கள் 21.10.2025 முதல் கூடுதலாக திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 6 மண்டல மேலாளர்கள் குழு ஒரு கூடுதல் பதிவாளர் ஆகியோர் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் பருவ கால சுமைதூக்குவோருக்கான ஊதியம் ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்று இருந்ததை ரூ.10 என உயர்த்தி வழங்கி ஊக்கமளித்துள்ளார். இதனால், சுமார் 34,000 தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இதனிடையே, பொது விநியோக திட்டத்தினை வட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தவும் மற்றும் சேமிப்புக் கொள்ளளவினை மேம்படுத்தவும் முதல்வா் ஆணையிட்டதைத் தொடர்ந்து, மொத்தம் 1 லட்சத்து ஆயிரத்து 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 83 வட்ட செயல்முறை கிடங்குகள் ரூ.199 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 38 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 கிடங்கு வளாகங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டில் கொண்டுவரப்படவுள்ளன. மேலும் 62 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 67 கிடங்குப் பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் 62,750 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 67 கிடங்குப் பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Annual average procurement of 42.61 lakh metric tonnes of paddy information Tamil Nadu government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com