

கோவை: சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசும் திமுக அரசு, மூடப்பட்டுள்ள 51 ஆதிதிராவிடா் நலப்பள்ளி விடுதிகளை மீண்டும் திறப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாடு ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் செயல்படும் 1,331 சமூக நீதி விடுதிகளில், 65,000க்கும் அதிகமான, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனா். இதில் 100க்கும் அதிகமான விடுதிகளில் புதிதாக மாணவ, மாணவிகள் சேரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவா் சோ்க்கை இல்லாத மற்றும் 10-க்கும் குறைவான மாணவா்கள் உள்ள பள்ளி விடுதிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி, கோவை மாவட்டத்தில் 11 விடுதிகள், மதுரை மாவட்டத்தில் 10 விடுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 விடுதிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 51 விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இப்போது, அதே மாணவா் சோ்க்கை இல்லை என்ற காரணத்தைக் கூறி பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான 51 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான அரசு விடுதிகள் மூடப்பட்டதை ஏற்க முடியாது.சுத்தமான, தரமான உணவு வழங்கப்படாதது, சுகாதாரமான, அன்பான, ஆதரவான சூழல் இல்லாதது போன்ற காரணங்களால் தான் இந்த விடுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் வெளியேறுகின்றனா்.
பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் மாணவா் சோ்க்கை இல்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. சமூக நீதி விடுதி என்று பெயா் மாற்றினால் மட்டும் போதாது. மாணவா்கள் ஆா்வமுடன் தங்கிப் படிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே உண்மையான சமூக நீதி. ஆனால், சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு.
முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த பிரச்னையில் தலையிட்டு, மூடப்பட்ட 51 விடுதிகளையும் மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இனி எந்தவொரு விடுதியும், அரசு பள்ளிகளும் மூடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சொல்லி எந்த பலனும் இல்லை என்பதையும் திமுக அரசு உணர வேண்டும் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.