

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவற்றை தடுக்க தமிழக அரசு உரிய துறைகள் மூலம் பரவலான கட்டுப்பாடுகளையும், கண்காணிப்பையும் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் கணிசமாக பல இடங்களில் கடந்த ஆண்டுகளை விட கூடிதலாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 15,796 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்பது பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வருகின்றன.
டெங்கு நோய் ஏ.டி.எஸ் கொசு மூலம் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். தற்போது தொடர்ந்து பெய்து வருகின்ற பருவ மழையின் காரணமாக பல இடங்களில் சுத்தமான நீர் தேங்கியுள்ளன. இந்த நன்நீரில் இந்த ஏ.டி.எஸ் கொசுவானது உருவாகிறது. சுற்றுப்புறத்தில் நீர் தேங்கியுள்ளதிலிருந்து இனப்பெருக்கமாகி ஏ.டி.எஸ் கொசு இந்த வைரசை பரப்பி வருகிறது.
இந்த கொசுக்களின் பெருக்கத்தை தடுப்பதற்கு நீர் தேங்காமாலும் அதில் இந்த கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சுகாதார துறை மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை அளித்தும், நீர் தேங்க கூடிய பகுதிகளை மக்கள் உதவியுடன் சுத்தம் செய்ய உள்ளாட்சித் துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு தனி நபரும் இந்த கொசுவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கொசு விரட்டிகளையும், கொசுவலைகளையும் பயன்படுத்த வேண்டும். கொசு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வை சுகாதாரத்துறை மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகும்.
மக்களுக்கு அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டுவலி, சோர்வு மற்றும் தோல் தடுப்புகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவமனைக்கு மக்கள் சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்கான விழிப்புணர்வை சுகாதாரத் துறை மக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும். கிராம செவிலியர்களைக் கொண்டு கண்காணிக்க வேண்டும். கடுமையான அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பாக சிறிய அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தி போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்கவும் சுகாதார துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உடனடியாக தமிழகம் முழுதும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி மற்றும் நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக நீர் தேங்கும் பகுதிகளை சுகாதாரத்துறை, நோய் தடுப்பு துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வு செய்து வடிகால் ஏற்படுத்தி ஏ.டி.எஸ் கொசுக்கள் பெருக்கத்தை குறைப்பதற்கான தடுப்பு மருந்துகளை தெளித்து விழிப்புடன் உடனடியாக செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சல் குறித்த தகவல்களையும் சேகரித்தும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கும், கடுமையான அறிகுறிகள் ஏற்படாத வண்ணம் முறையான மருத்துவ சிகிச்சையை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையங்களும், பொது சுகாதார நிலையமும், மருத்துவ கல்லூரிகளும் மமுழுவிச்சுடன் செயல்பட வேண்டும். தமிழக அரசு இதற்கான முழு ஏற்பட்டையும் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.