தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாமன்னன் இராஜராஜசோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா வெள்ளிக்கிழமை (அக்.31) தொடங்கியது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலமாக தொடங்கியது.
தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலமாக தொடங்கியது.
Published on
Updated on
2 min read

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் இராஜராஜசோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழா தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் , அமைச்சர்கள், ராஜராஜ சோழன் வேடத்துடன் கலைஞர்கள் பங்குபெற்ற மாபெரும் ஊர்வலத்துடன் வெள்ளிக்கிழமை (அக்.31) தொடங்கியது. விழா தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

தஞ்சை பெரியகோயிலை மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டினார். இந்த கோயில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. பெரிய கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தொழில்நுட்பம் இல்லாத 1000 ஆண்டுகளுக்கு முன்பே நவீன தொழில்நுட்பத்துடன் உலக கட்டடக் கலைக்கே சவால் அளிக்க கூடிய வகையில், பிரமாண்டமாகவும், தொழில்நுட்ப நேர்த்தியாகவும் பெரிய கோயிலை மாமன்னர் இராஜராஜசோழன் கட்டி பெருமை சேர்த்தார்.

மாமன்னன் இராஜராஜ சோழன் முடிசூட்டிய நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக இரண்டு நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு இராஜராஜ சோழனின் 1040-ஆவது சதய விழா பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மங்கள இசை, களிமேடு அப்பா் பேரவையின் திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெற்ற  மாபெரும் சதயவிழா ஊர்வலம்
தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெற்ற மாபெரும் சதயவிழா ஊர்வலம்

பின்னா், மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடக்க விழா நடைபெற்றது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற உள்ளது.

சதய விழாவையொட்டி, தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் சதயவிழா ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் கொம்பு வாத்தியம், சிலம்பாட்டம், புலியாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நையாண்டிமேளம், தவில், கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், தேவலோக நடனங்களான சிவன், பார்வதி, காளி, பச்சைக்காளி, பவளக்காளி, அரக்கன், கருப்பு, எமதர்மன் வேடங்களிலும், வள்ளி திருமண வேடத்திலும் கலைஞர்கள் பங்கேற்றனர்.

மேலும், அந்த கால இராஜராஜசோழனின் நகர்வலத்தை இந்த கால தலைமுறைக்கு நினைவுபடுத்தும் வகையில் குதிரை பூட்டப்பட்ட ரதம், இராஜராஜசோழன் வேடம், அமைச்சர்கள் வேடம், வாயில் காவலர்கள் வேடமிட்டு கலைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இந்த சதயவிழா ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக பெரிய கோயிலை வந்தடைந்தது.

இதையடுத்து பெரிய கோயில் வளாகத்தில் 1040-ம் சதயவிழா விழாவை குறிக்கும் வகையில் 400 கலைஞர்கள் பங்குபெறும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுள்ளது

தொடா்ந்து, கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம், மாலையில் 1040 நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கும் மாபெரும் பரதநாட்டிய நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு, மாமன்னன் இராஜராஜ சோழன் வரலாற்று நாடகம் ஆகியவை நடைபெறவுள்ளன.

சதய நட்சத்திர நாளான நவம்பா் 1-ஆம் தேதி காலை 7.20 மணியளவில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை திருவீதி உலா, பெருவுடையாா், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகலில் பெருந்தீப வழிபாடு, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இரவு 7 மணியளவில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசா் ஆா். மகாதேவன் சிறப்புரையாற்றுகிறாா். குன்றக்குடி ஆதீனம் தவத்திரு. பொன்னம்பல அடிகளாா் விருதுகள் வழங்கி அருளுரையாற்றுகிறாா். தொடா்ந்து பட்டிமன்றம், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளன.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (நவ.1) உள்ளூா் விடுமுறை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோயில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com