
காபூல்: ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு அருகே 160 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர் பலிகள் ஏதும் புதிதாக ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை காலை ஆப்கானிஸ்தானில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், உலக உணவுத் திட்டம் சார்பில் ஆப்கானிஸ்தானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குனார் மற்றும் நாங்கர்ஹார் மாகாணங்களுக்கு தேவையான அவசர உதவிகளை அனுப்பப்பட்டுள்ளது,
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்மற்றும் 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்ட அவசர உதவிகளை மேற்கோள் காட்டி, நிலநடுக்கம், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மோசமான வானிலை காரணமாக மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாமல் அச்சுறுத்தல் நிலவி வருவதாக காமா பிரஸ் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் "அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், சாலைகள் அழிக்கப்பட்டன. மேலும் பல உயிர்கள் பறிபோயின. இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த இக்கட்டான நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம் அந்நாட்டின் தலைநகா் காபூலை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தாா். காபூல் விமான நிலையத்தைச் சென்றடைந்த நிவாரணப் பொருள்களின் படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.
‘போா்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள், ஜெனரேட்டா்கள், சமையல் பாத்திரங்கள், குடிநீா் சுத்திகரிப்பு சாதனங்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் களநிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும்’ என்றும் அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.