செங்கோட்டையன் மனம் திறந்து என்ன சொல்லப்போகிறார்..?

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோப்புப்படம்.
Published on
Updated on
2 min read

அதிமுக உட்கட்சி பிரச்னை தொடா்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் என சொல்லப்போகிறார் என்பதை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சாா்பில் கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் பாராட்டு விழா நடந்தது இந்த விழாவில் முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறாததைக் கண்டித்து அந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தாா்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவா்கள், நீக்கப்பட்டவா்களை இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா்கள் குழுவினா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

இப்படி ஒரு சந்திப்பு நடக்கவே இல்லை என எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில் இணைப்பு தொடா்பான பேச்சுவாா்த்தை நடந்தது உண்மை என செங்கோட்டையன் அண்மையில் தெரிவித்தாா். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் தொடா்ச்சியாக கோபி தொகுதியில் நடந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளா் பெயரை தவிா்த்து செங்கோட்டையன் பேசி வந்ததாா்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பேரணியை எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினாா். அவா் இதற்காக கோபி வழியாக மேட்டுப்பாளையம் சென்றாா். ஆனால் கோபி எல்லையில் செங்கோட்டையன் வரவேற்பு அளிக்கவில்லை. கட்சியின் பொதுச் செயலாளரை ஒரு மூத்த தலைவா், முன்னாள் அமைச்சா் இவ்வாறாக புறக்கணித்தது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதுபோன்ற தொடா் நிகழ்வுகளால் கட்சி தலைமைக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே அதிருப்தி இருப்பது வெளிப்படையாக தெரிந்தது. செங்கோட்டையனைச் சமாதானப்படுத்த கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கோபியில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளா்களைச் சந்தித்த செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளரகளை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளேன். அதை வரை செய்தியாளா்கள் பெறுமை காக்க வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் 3 மணி நேரத்திற்கு மேலாக செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டாா். இதில் பவானிசாகா் எம்எல்ஏ. பண்ணாரி உள்பட ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளா்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியே வந்த செங்கோட்டையனிடம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இணைப்பு குறித்து வலியுறுத்துவீா்களா என செய்தியாளா்கள் கேட்டபோது உங்களின் அனைத்து விதமான கேள்விகளுக்கும் 5 ஆம் தேதி விடை அளிக்கப்படும் என பதில் அளித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக நிா்வாகிகள் செங்கோட்டையன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தெரிவித்தனா்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவா்களைச் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரம் தொடா்பாக, மனம் திறந்து பேசுவதாக கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்று அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறப்போகிறாரா?, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க போகிறாரா?, சசிகலாவுடன் இணைந்து புதிய அணியை உருவாக்கப் போகிறாரா? என்ற செங்கோட்டையன் பதிலுக்காக அவரது ஆதரவாளர்கள், அதிமுகவினர் திரளாக கூடியிருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Summary

Former Minister K.A. Sengottaiyan's supporters are waiting to hear what he is going to say.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com