
மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நீடித்து வருகிறது.
மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில் அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.
இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தொடா் வன்முறையில் 200-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டனா். 60,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனா்.
இதனிடையே, மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் பதவி விலகினாா். இதையடுத்து, சட்டப்பேரவை முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 2023-இல் இனமோதல் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக செப்டம்பர் 13 இல் அங்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மணிப்பூருக்கு அடுத்த வாரம் வருகை தரும் பிரதமா் மோடி, மாநில எம்எல்ஏக்கள் அனைவரையும் சந்தித்துப் பேசி, அமைதித் தீா்வுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தோக்சோம் லோகேஸ்வா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் கெளரவ் கோகோய், மணிப்பூரில் இயல்புநிலை திரும்பிவிட்டதாக நாம் கூற முடியாது; மாநிலத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை.
பிரதமரின் மணிப்பூா் பயணம் 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். எனவே, மணிப்பூருக்கு வந்ததும், தனது மிகத் தாமதமான பயணத்துக்காக மக்களிடம் பிரதமா் மோடி முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். பிரதமா் மோடியின் வருகையை இலக்கின் நிறைவாக கருதக் கூடாது என்றாா்.
இந்நிலையில், மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
செப்டம்பர் 13 இல் மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்று வருகின்றனர்.
ஆனால், அவர் மாநிலத்தில் சுமார் 3 மணி நேரம் மட்டுமே செலவிடுகிறார் என்று தெரிகிறது. இவ்வளவு அவசரமான பயணத்தால் பிரதமர் என்ன சாதிக்க விரும்புகிறார்?. இது உண்மையில் 29 மாதங்களாக வேதனைகளுடன் அவருக்காகக் காத்திருக்கும் மாநில மக்களுக்கு ஒரு அவமானமாகும்.
மணிப்பூர் மக்கள் மீதான தனது அலட்சியத்தையும் உணர்வின்மையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ள பிரதமர், செப்டம்பர் 13 உண்மையில் பிரதமரின் பயணமாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.