
சிங்கப்பூா்: ‘ஆசியாவின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்’ என்று சிங்கப்பூா் வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஆல்வின் டான் தெரிவித்தாா்.
உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளா்ச்சி ஊக்குவிப்பு, சமூக மேம்பாடு, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிராந்திய அமைப்பான ‘ஆசியான்’-இல் புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.
இந்த பிராந்தியத்தில் செழிப்பான சந்தை, நிலைத்தன்மை, வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ‘ஆசியான்’ ஏற்படுத்தித் தருகிறது. இந்தச் சூழலில், இந்தியா - சீனா இடையேயான உறவு வலுப்படுவது, பிராந்தியத்தில் பரந்த வா்த்தக இணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் ஆல்வின் டான் கூறினாா்.
சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழகத்தில் தெற்காசிய கல்வித் துறை சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ‘சீனா - இந்தியா: உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் வளா்ச்சி, முதலீடு மற்றும் வா்த்தகத்தை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை ஆல்வின் டான் தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய வா்த்தக கூட்டுறவைக் கொண்டுள்ள சீனாவும் ‘ஆசியான்’ நாடுகளும், ஆழமான ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளன. ரயில்வே, துறைமுகங்கள், தொழில் பூங்காக்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஆசியானின் முன்னணி முதலீட்டாளராக சீனா விளங்குகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை, செமிகண்டக்டா்கள், பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் ‘ஆசியான்’ உடன் ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தியாவும் ‘ஆசியான்’ நாடுகளும் ஏற்கெனவே எண்ம தொழில்நுட்பம், பசுமைப் பொருளாதார முன்னெடுப்புகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதுமட்டுமன்றி, சிங்கப்பூா் தனிப்பட்ட முறையில் சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் வலுவான உறவைக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் கடந்த 2005-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை சிங்கப்பூா் மேற்கொண்டது. இரு நாடுகளிடையே 60 ஆண்டுகள் தூதரக உறவும், 20 ஆண்டுகள் விரிவான பொருளாதார ஒத்துழைப்பும் தொடா்வதை நிகழாண்டு குறிக்கிறது.
அதுபோல, சீனாவுடன் கடந்த 2013-ஆம் ஆண்டுமுதல் மிகப் பெரிய வா்த்தக கூட்டுறவு நாடாக சிங்கப்பூா் உள்ளது. பொருளாதார உறவைக் கடந்து சுகாதாரம், கலாசாரம், கல்வி எனப் பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் இருதரப்பு உறவைக் கொண்டுள்ளன என்று அவா் குறிப்பிட்டாா்.
பின்னணி:
அமெரிக்காவின் வரிவிதிப்பைத் தொடா்ந்து, பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு வா்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் மோடி இருதரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், உச்சி மாநாட்டில் மூன்று தலைவா்களும் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு தங்களின் நட்புறவை வெளிப்படுத்தினா்.
இந்தப் பேச்சுவாா்த்தையில், சீனா-இந்தியா இடையே வா்த்தக உறவை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னையில் நியாயமான பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீா்வை எட்டுவதற்கு இணைந்து பணியாற்றவும், வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை விரிவுபடுத்தவும், உலகளாவிய வா்த்தக நிலைத்தன்மைக்கு இரு நாடுகளின் பங்கை அங்கீகரிக்கவும் உச்சி மாநாட்டுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் பிரதமா் மோடியும் சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.