
நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம் என நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி தெரிவித்தார்.
நேபாளத்தில் ஊழல் மற்றும் சமூக வலைதள தடைக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு கட்டடங்கள் சூறையாடப்பட்டன. இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி கடந்த செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு சட்டம்- ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காத்மாண்டு உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வணிக வளாகங்கள், கடைகள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும் என எதிா்பாா்ப்பு நிலவியது.
இளைஞா்கள் போராட்டத்தின்போது உச்சநீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதித் துறை சாா்ந்த வரலாற்று ஆவணங்கள் பெருமளவில் சேதமடைந்தன.
இருப்பினும், நீதியை நிலைநாட்டுவதற்கான பணிகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நீதித் துறையை செயல்பாட்டுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளோம் என நேபாள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பிரகாஷ்மான் சிங் ரௌத் தெரிவித்தார்.
இதனிடையே, 73 வயதான நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றார். பொது வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இமயமலை நாட்டின் முதல் பெண் பிரதமரான சுசீலா கார்கி, இளைஞர் இயக்கத்தினரிடையே மட்டுமல்ல, நேபாளத்தில் நிலவும் கொந்தளிப்பான நேரத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் பாரம்பரிய அரசியல் சக்திகளிடையேயும் மிகவும் பிரபலமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக உருவெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்ற சுசீலா காா்கி தலைமையில் உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் என முக்கியத் துறைகளுக்கான புதிய அமைச்சரவைக் குழு ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பிரதமா் அலுவலகம் கடுமையாகச் சேதமடைந்த நிலையில் உள்துறை அமைச்சருக்கான புதிய கட்டடத்தில் சுசீலா காா்கியின் அலுவலகம் செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் போராட்டத்தின்போது காயமடைந்து காத்மாண்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சுசீலா காா்கி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா்.
இந்நிலையில், சுசீலா காா்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக போராட்டத்தின் போது இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தினார்.
பலியானவர்களை தியாகிகளாக அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி அறிவித்துள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், நானோ எனது குழுவினரோ அதிகாரத்தை ருசிப்பதற்காக இங்கு வரவில்லை. நாங்கள் ஆறு மாதங்களுக்கு மேல் அதிகாரத்தில் இருக்க மாட்டோம். மக்களின் ஆதரவோடு புதிய அரசாங்கம் அமைந்தவுடன் அனைத்து அதிகாரத்தையும் பொறுப்பையும் ஒப்படைத்துவிடுவோம். அதை முறையாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி தெரிவித்தார்.
மேலும், ஊழலை ஒழிப்பதற்காக இளைஞர்கள் நடத்திய போராட்டம் பாராட்டுக்குரியது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் சிறந்த நிர்வாகம் மற்றும் பொருளாதார சமநிலை என்பது அவர்களது விருப்பம் எனக் கூறினார்.
போராட்டத்தின் போது இறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் தியாகிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
மேலும், வன்முறையின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுவரையில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. 191 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் போராட்டக்காரர்கள் 134 பேர், போலீஸ் அதிகாரிகள் 57 பேர் என தெரியவந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.