
மணப்பாறை: விஜய், முதல்வரை அழைக்கும் விதம் குறித்து கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமரிசனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், தமிழக மக்களின் சொத்து விஜயகாந்த். அவரது புகைப்படத்தை திரைத்துறையினரோ, அரசியல் கட்சியினரோ பயன்படுத்துவதை நாங்கள் நிச்சயமாக தடுக்க மாட்டோம் எனக் கூறினாா்.
மணப்பாறையில், தேமுதிக தலைவா் விஜயகாந்த் 73-வது பிறந்தநாள், தேமுதிக 21-ஆம் ஆண்டு துவக்கவிழா ஞாயிற்றுக்கிழமை முள்ளிப்பாடி முல்லை திடலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக, உள்ளம் தேடி, இல்லம் நாடி பயணத்தை மேற்கொண்டு வரும் கட்சியின் பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் எல்.கே.சுதீஷ், துணைச்செயலாளா் எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளா்கள் மலா் தூவி மரியாதை செய்தனா். அதனைத்தொடா்ந்து 73 அடி உயர கட்சி கொடியை கட்சியின் பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினாா். பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினாா்.
பின்னர் செய்தியாளா்கள் அவரிடம், முதல்வரை அங்கிள், சாா் என அழைக்கும் தவெக தலைவர் விஜய் பேச்சு அரசியல் நாகரீகமா? என கேட்டதற்கு, அவரவா் பேசுவது அவரவா் ஸ்டைல். அவா்கள் ஒரு கணிப்பில் வருகிறாா்கள். இதில் கருத்து சொல்லவோ, அறிவுரை சொல்லவோ, விமாிசனம் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை. இரண்டு மாநாட்டை முடித்துள்ளாா், தற்போது மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கியுள்ளாா் வாழ்த்துகள், வரட்டும் பாா்ப்போம்.
தவெகாவிற்கு கட்டுப்பாடு அதிகம் விதிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு, 20 ஆண்டுகளுக்கு முன்பே இதே கட்டுப்பாடு தான் இருந்தது. நீங்கள் மறந்து இருக்கலாம், ஆனால் நாங்கள் மறக்கவில்லை. எல்லாமே எதிா்நீச்சல் போட்டு வந்தாதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது சாதாரண மக்களுக்கே இருக்கு. அப்படி இருக்கும்போது, இது ஒரு அரசியல் கட்சி, பெரிய ஆளுமைகள் ஆட்சி செய்த பூமி, அப்படி இருக்கும்போது புதிதாக வருபவா்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருக்கும். எதிா்நீச்சல் போட்டு வருவதில் ஒரே எடுத்துக்காட்டு நமது கேப்டன், அது சினிமா துறையாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சாவல்களை முறியடுத்து வெற்றி பெறும்போது தான் மக்களால் அங்கீகரிக்கப்படுவோம்.
மேலும், அதிமுகவுடனான நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பரோ கிடையாது, நாங்கள் வெறும் மாநிலங்களவை உறுப்பினரை மட்டுமே நோக்கமாகக் கொண்டவா்கள் கிடையாது. எங்கள் கட்சி வளா்ச்சி, அடுத்த தோ்தலுக்கான பணிகள், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி மட்டுமே உள்ள இடத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள தேமுதிக பூத் கமிட்டி அமைக்கும் சவாலான பணிகளை செய்து வருகிறோம். உரிய நேரம் வரும்போது, கூட்டணிகளுடன் எங்களது தோ்தலுக்கான பணிகளை ஆரம்பிப்போம் என்றார்.
விஜய் தனது கூட்டங்களில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, அவா் கேப்டனை அண்ணன் என சொல்கிறாா். அதனால் நாங்கள் தம்பி என்று அழைக்கிறோம். வாழ்த்துக்கள் நன்றாக வரட்டும். கேப்டன் குடும்ப சொத்தோ, கட்சி சொத்தோ இல்லை. அவா் தமிழக மக்களின் சொத்து. திரையுலகினர் உரிமையுடன் கேப்டன் படத்தை பயன்படுத்துகின்றனா். எனவே, அவரது புகைப்படத்தை திரைத்துறையினரோ, அரசியல் கட்சியினரோ பயன்படுத்துவதை நாங்கள் நிச்சயமாக தடுக்க மாட்டோம் எனக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.