
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினர்கள் வியாழக்கிழமை குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடியது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் மறைந்த தலைவா்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்து முடித்ததும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு ஒரு பிரச்னை தொடர்பாக பேச ஆரம்பித்தார்.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மு. வைத்தியநாதன் உள்ளிட்ட 2 பேர் மாசு கலந்த குடிநீா் விநியோகத்தால் நகர பகுதியில் மக்கள் பாதிப்பு மற்றும் சட்டப்பேரவையைக் கூடுதலாக 10 நாள்கள் நடத்த வலியுறுத்தி கூச்சல் இட்டனர்.
மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் கூச்சலிட்டார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரை இருக்கையில் அமருமாறும் வலியுறுத்தினார்.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுக , காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவைத் தலைவர் செல்வம் முன்பு தரையில் அமர்ந்து தர்னா நடத்த முயன்றனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ஆர். செல்வம் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.எல்.ஏக்களை பேரவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வெளியே சென்றனர். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுயேச்சை எம்.எல்.ஏ நேருவும் வெளியேற்றப்பட்டார். மேலும், சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசிய அனைத்தையும் அவை குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டார் பேரவைத் தலைவர் ஆர். செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.