
இந்தியாவின் சார்பில் ‘ஹோம்பவுண்ட் (HOMEBOUND)’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஹிந்தியில் விக்கி கௌசலின் மசான் படத்தை இயக்கியிருந்த நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷால் ஜேத்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக, உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இந்த படம் இந்தாண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் திரையிடப்பட்டது. அங்கு இந்தப் படத்துக்கு ஒன்பது நிமிடம் கைதட்டி பாராட்டப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச மக்கள் விருதுக்கான 2-வது இடத்தைப் பிடித்தது.
தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான படம், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான உண்மைச் சம்பவத்தின் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட “டேக்கிங் அம்ரித் ஹோம்" என்ற கட்டுரையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் வட இந்தியாவில் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் சந்தன் குமார், முகமது சோஹைஃப் என்ற இரு இளைஞர்கள் சமூகத்தில் நிலவும் சாதி மற்றும் மத ரீதியிலான சிக்கல்களுக்கு மத்தியில், இருவரும் காவல் துறையில் வேலைக்கு சேர்வதற்கு அடுத்தகட்டத்துக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். மேலும், அடக்குமுறைக்கு எதிராக எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்கர் தேர்வுக்கு இந்தப் படத்துடன் போட்டியாக புஷ்பா-2, சூப்பர் பாய்ஸ் ஆஃப் மலேஹான், கண்ணப்பா உள்ளிட்ட முன்னணி படங்களும் போட்டிப் போட்டன. இருப்பினும், இந்தியா சார்பில் ஹோம்பவுண்ட் தேர்வு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.