சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்!

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
Published on

தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய புதிய வகை பட்டாசுகள் தயாரிக்கும் பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 80 சதவீத பட்டாசுகள் இங்கிருந்துதான் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தீபாவளி மட்டுமல்லாது, ஆயுத பூஜை, கோயில் திருவிழா, திருமண விழா போன்றவற்றுக்கும் பயன்டுத்தப்பட்டு வருகிறது. எனவே இதற்கு எப்போதும் வரவேற்புகள் உண்டு.

இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகள் நெருங்கி வருவதையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆயுத பூஜைக்காக வட மாநிலங்களுக்கு பட்டாசுகளை அனுப்பி வைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து விருதுநகர் சோனி விநாயகா பட்டாசு நிறுவனத்தின் உரிமையாளர் அபிஷேக் கூறியதாவது:

இந்த ஆண்டு அனைத்து வகை பட்டாசுகளும் விற்பனையாகிவிடும் என்று நம்புகிறோம். இந்த ஆண்டும் பட்டாசு விலைகளில் பெரியளவில் அதிகரிப்பு இருக்காது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் விற்பனை நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி திருநாள் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே வருவதால் விற்பனை கடந்த ஆண்டை விட சிறப்பாக இருக்கும். பட்டாசு உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதால் அதிகயளவிலான விற்பனையை எதிர்பார்க்கலாம். எனவே, இந்த ஆண்டு அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தேவை அதிகமாக இருப்பதால் இந்தத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

சோனி விநாயகா பட்டாசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரி ராம் குமார் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வகை பட்டாசுகளை அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

மக்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய தயாரிப்புகளை எதிர்பார்ப்பதால் இந்த ஆண்டு பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் புதிய வகை பட்டாசுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். சமீபத்திய புதிய வகை பட்டாசுகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது என்பதை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம். விற்பனை எப்போதும் நன்றாகவே இருந்தது, இந்த ஆண்டு அவை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் இந்த தீபாவளி பண்டிகைக்காக சிறுவர்கள் விரும்பும் பென்சில், கம்பி மத்தாப்பூ, தரைச் சக்கரம், பூச்சட்டி, ஸ்டோன், பாம்பு மாத்திரை, சாட்டை உள்ளிட்ட பட்டாசு வகைகளும், பெரியவர்கள் விரும்பும் அணுகுண்டு, ராக்கெட், சரவெடி, விண்ணில் ஒளிசிந்தும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், சிறுவர்களுக்கான குறிப்பிட்ட புதிய வகையிலான பட்டாசுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். சிங்கம், ஓநாய் மற்றும் புலி தீம் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பட்டாசுகள் போன்ற காட்டு விலங்குகளை கருப்பொருள்களாக கொண்ட புதிய வகை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இவற்றுடன், அனைத்து வயது குழந்தைகளையும் ஈர்க்கும் வகையில் கார்ட்டூன்கள், விளையாட்டுகள், இசை மற்றும் பிற கருப்பொருள்களாக கொண்ட பல புதிய வகை பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று கூறினார்.

மறுபுறம், தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில் தானாக முன்வந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளிலும் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, 15 ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஜூலை 14 முதல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அன்று முதல், சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஆய்வுக்காக மூடப்பட்டன.

ஆய்வுகளின் போது, ​​ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், தொழிற்சாலை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்பதால் இது தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தியைப் பாதிக்கும் என்று அஞ்சி, பல தொழிற்சாலைகள் தானாக முன்வந்து பட்டாசு உற்பத்தியை நிறுத்தியுள்ளது.

Summary

With the festival of lights, Deepavali approaching, firecracker production has gained momentum in Tamil Nadu's Sivakasi, widely known for fireworks' hub.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com