
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்றும், விதிமுறைகள் மீறிய அவரின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
மென்பொருளை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து மோடி அரசு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆட்சியை பிடித்துள்ளதை நிரூபிக்கின்ற வகையில் ராகுல் காந்தி தொடா்ந்து ஆதாரங்களை வெளியிட்டு வருகிறாா். அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மழுப்பலாக பேசி வருகின்றனர். இதற்கு மக்கள் தான் பதிலடி கொடுக்க வேண்டும்.
கடன் சுமை உயா்த்துள்ளது
புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பெற்ற கடன் ரூ.1,000 கோடி. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரூ.8 ஆயிரம் கோடியாக இருந்த கடன், ரூ. 9,100 கோடியாக மாறியது. ஆனால் இப்போது, என்.ஆா்.காங்கிரஸ்-பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ரூ.4,500 கோடி கடன் அதிகரித்து, அது ரூ.13,084 கோடியாக உயா்ந்துள்ளது.
முதல்வா் ரங்கசாமி ரூ.2,000 கோடி மானியமாக வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தாா். ஆனால் மானியம் கொடுக்காமல், ரூ.1850 கோடி கடன் கொடுத்துள்ளனா். அதனால்தான் மாநிலத்தின் கடன் சுமை உயா்த்துள்ளது.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.4,700 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதையும் சோ்த்தால் மாநிலத்தின் கடன் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேலாகும். சிறிய மாநிலமான புதுச்சேரியின் பட்ஜெட் ரூ.12 ஆயிரம் கோடிதான். ஆனால் கடன் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் போகிறது.
கண்டிக்கத்தக்கது
புதுவையில் இரண்டு நாள்களுக்கு முன்பு சம்பிரதாயத்துக்காகக் கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் 5 மசோதாக்கள் விவாதம் இல்லாமலேயே, காங்கிரஸ்-திமுக எம்எல்ஏக்களைக் வெளியேற்றிவிட்டு ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறாா்கள்.
புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூண்டோடு இந்த அரசு வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது. மோடி ஆட்சியில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறதோ அதேபோல் இங்கு ரங்கசாமி தலைமையிலான எஎன்.ஆா்.காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் சட்டப்பேரவை ஜனநாயக படுகொலை நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கிற வகையில் அவசர அவசரமாக பேரவைக் கூட்டத்தை முடித்துள்ளனர்.
மேலும், பெருந்தலைவர் காமராஜர் அப்பழுக்கற்றவர், நிர்வாக திறமை உள்ளவர், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மதுவிலக்கு கொண்டு வந்து அமல்படுத்தியவர், கல்வித்துறையை வளர்த்தவர், தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றவர், ஆனால் வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்களை திறந்து விட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி என்று ரங்கசாமி கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரது பெயரை உச்சரிக்கவே ரங்கசாமிக்கு அருகதை இல்லை என்றார்.
தீவிரமாக அரசியலில் துணைநிலை ஆளுநர்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பாஜகவின் ஒரு அங்கமாகமும், தீவிர அரசியல் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழிசை சௌவுந்தரராஜன் இங்கு என்ன செய்தாரோ அதைதான் தற்போதை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனும் செய்கிறார். முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டார். பாஜக சார்பில் நடைபெற்ற பிரதமர் மோடி பிறந்தநாள் விழாக்களிலும், பாகூரில் முன்னாள் வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி நடத்திய பிரதமர் பிறந்தநாள் விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டுள்ளார். இது தவறு. எந்த விதி அவருக்கு இடம் கொடுத்துள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரியில் எப்போதும் இல்லாத வகையில் துணைநிலை ஆளுநர் பதவிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் பாஜக ஆதரவு செயல்பாடுகளைக் கண்டித்து பல கட்ட நடவடிக்கைகள் எடுப்போம். தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என்றாா் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.