
புதுதில்லி: நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.
இதில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதேசி எனும் தாரக மந்திரமே வலிமை சோ்க்கும் என பேசினார்.
காணொலியில் அவர் பேசியதாவது,
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதேசி எனும் தாரக மந்திரமே வலிமை சோ்க்கும். ஒவ்வொரு வீடும், ஒவ்வொரு கடையும் சுதேசியின் அடையாளமாக வேண்டும். சுதேசி பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
முன்பு இந்திய தயாரிப்புகள், தங்களின் மேலான தரத்துக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தன. அப்பெருமையை மீட்டெடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு, நாட்டின் சிறு-குறு-நடுத்தர தொழில் துறையினருக்கு உள்ளது. உலகத் தரத்தில் பொருள்களை உருவாக்க வேண்டும்; இதன் மூலம் நாட்டின் அடையாளத்தையும் மதிப்பையும் உயா்த்த வேண்டும்.
நமது அன்றாட வாழ்வில் வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்கள் எப்படியோ அங்கமாகிவிட்டன. அதிலிருந்து விடுபட்டு, இந்திய மக்களின் கடின உழைப்பில் உருவான பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.
தற்சாா்பு இந்தியா மற்றும் சுதேசி பிரசாரத்துக்கு மாநிலங்கள் உறுதியுடன் ஆதரவளிக்க வேண்டும்; தங்கள் மாநிலங்களில் முழு ஆற்றலுடன் உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிப்பதோடு, முதலீட்டுக்கு உகந்த சூழலை உறுதி செய்ய வேண்டும். மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பயணித்தால், தற்சாா்பு இந்தியா இலக்கை எட்ட முடியும் என்று மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.