இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மக்கள் மீதான கவலை இருந்திருந்தால் அவர் ஏன் வீட்டில் இருக்கிறார்...
அமைச்சர் கே.என். நேரு
அமைச்சர் கே.என். நேரு
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி: மக்கள் மீதான கவலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என அமைச்சர் கே.என். நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலியில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் 11 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான் பணிகள் புதன்கிழமை(செப்.24) தொடங்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான பணி இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

இதனைத் தொடர்ந்து திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருப்பது குறித்த :செய்தியாளர்களின் கேள்விக்கு,

அவர் மக்கள் மீது ரொம்பக் கவலைப்பட்டார். அதனால்தான் இப்போது வீட்டில் இருக்கிறார். அவருக்கு உண்மையிலேயே மக்கள் மீதான கவலை இருந்திருந்தால், அவர் ஏன் வீட்டுக்குப் போகிறார்? (தேர்தலில் தோல்வியடைந்தார்). திமுகவை குறிவைத்து எல்லோரும் தாக்குகிறார்கள். அவர்களுக்கு இதைவிட்டால் பேசுவதற்கு வேறு ஏதுவும் இல்லை. அதனால் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

விஜய் குறித்த கேள்விகளைத் தவிர்த்த நேரு

காய்த்த மரம்தான் கல்லடிபடும் என கூறியிருக்கும் தவெக தலைவர் விஜய்யிக்கு அரசியல் அறிவு இல்லை என நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு "இல்லை, வேறு ஏதாவது பேசுங்கள்" என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார்.

காவல்துறை அனுமதி பாரபட்சமற்றது

நடிகர் விஜய் ரசிகர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான பிரசாரங்களுக்குப் பாரபட்சம் இல்லாமல் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்களே, இந்த விவகாரத்தில் திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறதா?

"அப்படி எதுவுமில்லை. அமைச்சராக இருக்கும் நான் திமுக சார்பாக ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்றாலும், காவல்துறையிடம் அனுமதி பெற்றுத்தான் நடத்த முடியும். காவல்துறை பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல், அந்த பகுதியில் வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டும், கூட்டதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுமா என்பதை ஆராய்ந்துதான் அனுமதி வழங்குவார்கள். தவிர்க்க முடியாத சூழலில், மாற்று இடங்கள் இருந்தால், அந்த இடத்தில் அனுமதி கொடுப்பார்கள். இதுதான் காவல்துறையின் நடைமுறை.

நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தாலும் இதே நடைமுறைதான். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட, பல இடங்களில் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால், அவர்கள் சொல்லும் மாற்று இடத்தில்தான் நாங்கள் கூட்டம் நடத்துவோம். இது எனக்கோ, திமுகவுக்கோ மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் இதுதான் நடைமுறை என்றார்.

உள்ளூர் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு

பொன்னாகுடி பகுதிக்கு அரசுப் பேருந்துகள் சரிவர வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகிறார்களே?, நிச்சயமாக, பேருந்து சேவைக்கான நடவடிக்க எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர் இங்கே இருக்கிறார், இதற்கான நடவடிக்கையை எடுப்பார் என தெரிவித்தார்.

தூர்வார உடனடியாக நடவடிக்கை

பொன்னாகுடி பெரிய குளம் தூர்வாரப்படாததால், நீரைச் சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்களே?, நீங்கள் சொன்னதை கருத்தில் கொள்கிறோம். தூய்மை இந்தியா திட்டம் போல, இதற்கும் ஒரு திட்டம் இருக்கும். சிஎஸ்ஆர் நிதி மூலமாகவோ அல்லது மாவட்ட ஆட்சியர் மூலமாகவோ அதைத் தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்றார்.

அதிமுக அலுவலகம் தில்லியில் செயல்படுகிறதா?

அதிமுகவின் தலைமை அலுவலகம் தில்லியில் செயல்படுவதாக கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளாரே?, தில்லியில் இருந்து செயல்படுவதாக இல்லை. அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள், அதைத்தான் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று நேரு சிரிப்பாக பதிலளித்தார்.

Summary

If EPS was concerned about the people, why is he at home? says K.N. Nehru

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com