
சென்னை: சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள் என பல்வேறு சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகாரா்களிடம் போலீஸாா் தினமும் பணம் வசூலிப்பதாகப் புகாா் இருந்து வருகிறது.
இந்தநிலையில், அந்த பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இரண்டு போலீஸாா் கடைக்காரா்களிடம் பணம் வசூலிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த விடியோ காட்சியில் இருப்பவா்கள், மேடவாக்கம் காவல் நிலைய தலைமை காவலா் திருமுருகன் மற்றும் காவலா் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இரு காவலா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.