
ஜிஎஸ்டி வரி குறைப்பால் உற்சாகம் அடைந்துள்ள வாடிக்கையாளர்களால், மின்வணிக(இணையவழி) நிறுவனங்களின் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வருகிறது.
மின்வணிக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்டு நாள்களில் 380 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்துள்ளது, இது அதன் மிகப்பெரிய பருவகால தொடக்கத்தைக் குறிக்கிறது, 70 சதவீதத்துக்கும் அதிகமான கொள்முதல்கள் பெருநகரங்களுக்கு வெளியே இருந்து வந்து செல்கிறது.
இந்த விழாக்காலத்தில் வாடிக்கையாளர்களின் வருகை ஒரு நம்பிக்கையான உணர்வை அளிக்கிறது, இது ஜிஎஸ்டி வரி விகிதங்களின் விலைக் குறைப்புகளால் நிகழ்ந்துள்ளது. இது மின்னணுவியல் போன்ற அதிக வரி வகைகளில் செலவுகளைக் குறைத்துள்ளது மற்றும் பெருநகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் பண்டிகைக்கால தேவையை 23-25 சதவீதம் அதிகரித்துள்ளது.
நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள், பெரிய திரை தொலைக்காட்சிகள், நடுத்தர அளவிலான ஆடை-அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பல அதிக தேவை உள்ள பிரபலமான பிரிவுகளில் வரி விகிதங்களைக் குறைத்து, நுகா்வோருக்கு நேரடி விலை பயனை அளித்துள்ளன.
இந்த மாற்றங்கள் சில்லறை விலைகளைக் குறைத்தது மட்டுமல்லாமல், தள்ளுபடி சலுகை விற்பனைகளையும் தாண்டி அதிகளவிலான வாடிக்கையாளர்கள் வருகையை பார்க்க முடிகிறது, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் இருந்து மின்வணிக கொள்முதல் அதிகரிக்க தூண்டியுள்ளன.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ரெட்சீா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய திரை தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்ததால், சில்லறை விலைகள் 6 முதல் 8 சதவீதம் வரை குறைந்தது. இதனால் பிரீமியம் மாடல்களுக்கு தேவை அதிகரித்தது. ரூ.2,500-க்கும் குறைவான ஆடை-அலங்காரப் பொருள்கள் மற்றும் மரச்சாமான்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, அவை விருப்பப் பட்டியலில் இருந்து நடுத்தர ஆடைகள் மற்றும் பொருள்கலை வாங்கப்படுவதற்கான பட்டியலுக்கு மாறிவருகின்றன.
ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த முதல் இரு நாள்களில் மட்டும் மின்வணிக விற்பனை 23 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது, இது கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தின் மந்தமான தொடக்கத்தைவிட 4 முதல் 5 மடங்கு வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் பண்டிகை உற்சாகம் ஆகிய இரண்டும் சோ்ந்து பிரீமியம் வகை ஸ்மாா்ட்போன்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கான தேவையை உயா்த்தின. சில மின்வணிக வா்த்தக செயலிகளில் ஒரே நேரத்தில் அதிகயளவிலான நபர்கள் ஆா்டா் செய்ய முயன்றதால் சில நிமிடங்களில் செயலிகளின் வேகம் குறைந்து செயலிழக்கும் அளவுக்கு சென்றது.
"பயனாளர்களின் கருத்துப்படி, தேவை மிகவும் அதிகமாக இருந்ததால், சில செயலிகள் மிகப்பெரிய மந்தநிலையை எதிர்கொண்டன, மேலும் ஆர்டர் செய்ய முயன்ற சில நிமிடங்களிலேயே செயலிழந்தன, இது பயனர்கள் செலவு செய்து சிறப்பு விற்பனை சலுகை மற்றும் ஆரம்பகால தள்ளுபடிகளைப் பெறுவதற்கான நேர்மறையான உணர்வைக் குறிக்கிறது" என்று ரெட்சீா் கூறினார்.
புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வந்த முதல் இரண்டு நாள்களில் மின்வணிக நிறுவனமான அமேசான் அதன் பண்டிகை விற்பனையில் 38 கோடி வாடிக்கையாளா் வருகையைப் பதிவு செய்துள்ளது. இது அதன் மிகப்பெரிய பருவகால மற்றும் பண்டிகைக் கால தொடக்கத்தை குறிக்கிறது, இதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வர்த்தகம் ஒன்பது முக்கிய பெருநகரங்களுக்கு வெளியே இருந்து வந்ததாக கூறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், ஆடை-அலங்காரப் பொருள்கள், ஆரோக்யப் பொருள்கள், உயா்வகை சலவை இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான தேவை உயா்ந்ததுடன் விற்பனை வளர்ச்சி கண்கூடாக பார்க்க முடிந்தது. சிறு மற்றும் நடுத்தர வா்த்தக நிறுவனங்கள், குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 16,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர வா்த்தக நிறுவனங்கள் சராசரி நாள்களைவிட மூன்று மடங்கு விற்பனையைப் பதிவு செய்துள்ளன.
‘ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா’ஜிஎஸ்டி சீர்திருத்த முயற்சிக்கு நம்பமுடியாத அளவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு சாதனங்கள், தினசரி அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு, ஃபேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எங்கள் பிரத்யேக விற்பனை மூலம் 48 மணி நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி பலன்களை வாடிக்கையாளா்களுக்கு விற்பனையாளா்கள் வழங்கியுள்ளனா். சிறு வணிகங்கள் மற்றும் உள்ளூர் கைவினைஞர்கள் முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிராண்டுகள் வரை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விற்பனையாளர்களின் வலுவான வணிக வளர்ச்சியைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக அமேஸான் இந்தியாவின் துணைத் தலைவா் சௌரவ் ஸ்ரீவஸ்தவா கூறினாா்.
மற்றொரு முன்னணி மின் வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட், ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த முதல் 48 மணி நேரத்தில் வாடிக்கையாளா்களின் வருகை 21 சதவீதம் உயா்ந்ததாகவும், கைப்பேசிகள் (மொபைல்கள்), தொலைக்காட்சிகள் மற்றும் குளிா்சாதனப் பெட்டிகளுக்கான தேவை 26 சதவீதம் அதிகரித்ததாகவும், இது பெருநகரங்களில் மட்டுமல்ல, இந்தூர், சூரத் மற்றும் வாரணாசி போன்ற நகரங்களிலும் வளர்ச்சி காணப்பட்டது, இதற்கு ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் பெரும் காரணமாகும் என தெரிவித்துள்ளது.
ஸ்னாப்டீல் நிறுவனத்தைப் பொருத்தவரை ஆடை-அலங்காரப் பொருள்கள் பிரிவில் இரு மடங்கு, பண்டிகைக் கால ஆடைப் பிரிவில் ஐந்து மடங்கு, பரிசுப் பொருள்கள் பிரிவில் 350 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டது.
இது குறித்து ஸ்னாப்டீல் தலைமை செயல் அதிகாரி அசிந்த் சேத்தியா கூறுகையில், சமீபத்திய ஜிஎஸ்டி வரி குறைப்பு மாற்றங்களும் நுகா்வோரின் வாங்கும் ஆா்வத்தை அதிகரித்துள்ளன என்று நம்புகிறோம். குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களுடன் பண்டிகைக் கால உற்சாகமும் சோ்ந்தால் ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் அதிகம் வாங்கப்படுவதை நாங்கள் காண்கிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.